Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-05

அகழ் யுத்தம் - ஷவ்வால் 5

முஸ்லிம்களை அழித்தொழித்தொழித்து விடலாம் என்று குறைஷிகள் கண்ட கனவு பத்ருப் போரிலும், உஹதுப் போரிலும் கானல் நீராகிப் போனாலும், குறைஷிகளை அடுத்து இன்னுமொரு எதிரிக்கு இப்பொழுது முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்து
கொண்டிருந்த யூதர்கள் மக்கத்துக் குறைஷிகளைப் போலவே முஸ்லிம்களை வளர விடுவது நமக்கு ஆபத்து என்று உணர ஆரம்பித்தார்கள், முஸ்லிம்களை அழித்து விட வேண்டுமென்பது அவர்களது தனியாத ஆசையாகவும் இருந்தது. இன்னும் இதற்கான சதித் திட்டங்களைத் தீட்டிய அவர்கள், முஸ்லிம்களை நேரிடையாக மோதுவதைத் தவிர்த்துக் கொண்டு, சதித்திட்டங்களின் வாயிலாகவும், மோசடிச் செயல்களின் வாயிலாகவும் முஸ்லிம்களைக் கருவறுக்க வேண்டும் என திட்டம் தீட்டலானார்கள். எனவே, அதன் முதற்கட்டமாக மக்கத்துக் குறைஷிகளுக்கும் இன்னும் தங்களது சகோதர யூத குலத்தவர்களுக்கும் அவர்கள் முஸ்லிம்களை அழித்தொழிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி செய்திகளை அனுப்பி, முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் தரிக்க வேண்டுகோள் வைத்தார்கள். யூதர்களின் சதிச் செயல்களின் காரணமாக, கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் கொண்ட படை ஒன்று திரண்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த தூதையும், அதனை ஏற்றுக் கொண்ட நெஞ்சங்களையும் அழித்தொழிப்பதற்காக, படை திரண்டு வருகின்றது என்பதனைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவைச் சுற்றிலும் அகழ் - குழி தோண்டுமாறு தனது தோழர்களுக்கு உத்தரவிட்டதோடு, தானும் அதில் பங்கெடுத்துக் கொண்டார்கள். மதீனாவின் எல்லைக்குள் எதிரிகள் நுழைவதற்கு முன்பாகவே இப்பொழுது குழி வெட்டப்பட்டு தயார் நிலையில் இருந்தது. எதிரிகள் தரப்பில் 10 ஆயிரம் ஆயுதந் தரித்த போர் வீரர்கள் திரட்டப்பட்டிருந்த அதே வேளையில், முஸ்லிம்களின் தரப்பிலோ 3 ஆயிரத்திற்கு மேல் வீரர்கள் இல்லை. 3 ஆயிரத்திற்கும் சற்றுக் குறைவான எண்ணிக்கையுடையோராக இருந்தார்கள். இவர்களில் பலர் ஊணமுற்றோராக இருந்ததோடு, அந்தக் காலகட்டத்தில் கடுமையான குளிர் நேரமாகவும் இருந்தது. முஸ்லிம்கள் எண்ணிக்கையிலும், இன்னும் வாய்ப்பு வசதிகளிலும் மிகக் குறைவான வளத்தையே பெற்றிருந்தும் கூட, அவர்களது இறைநம்பிக்கையின் உறுதியானது ஒரு மாத கால முற்றுகையைத் தாக்குப் பிடிக்க வைத்ததோடு மட்டுமல்லாது, எதிரிகளின் தரப்பில் கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தியது. இந்த முற்றுகைப் போராட்டத்தில், அகழியின் ஒரு பகுதி அபுபக்கர் (ரலி) அவர்களின் தலைமையின் கீழ் இருந்தது. அந்த இடத்தில் ஒரு பள்ளிவாசலும் கட்டப்பட்டது.

ஹதைபிய்யா உடன்படிக்கை, துல்காயிதா 6

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களுடன் துல்காயிதா 6 அன்று மதீனாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ் செய்யும் நிமித்தமாகக் கிளம்பினார்கள். இஹ்ராம் அணிந்திருந்த நிலையில், பலிப் பிராணிகளையும் தங்களுடன் கொண்டு சென்றதோடு, முழுக்க முழுக்க ஹஜ் செய்யும் நோக்கத்துடனேயே மக்காவை நோக்கிக் கிளம்பினார்களே ஒழிய, குறைஷிகளை எதிர்த்துப் போர் புரியும் நிமித்தமாகச் செல்லவே இல்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன், அன்ஸார்களும், முஹாஜிர்களும் இன்னும் உதவியாளர்களுமாக கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர்களுடன் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். வரும் வழியில் மக்கத்துக் குறைஷிகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிற்கு நுழைவதைத் தடுக்கும் பொறுட்டு திரண்டு நிற்பதாகத் தகவல் கிடைத்தவுடன், வழக்கமான பாதையை விட்டு விட்டு, பாதையை மாற்றி ஹ{தைபிய்யா என்ற இடத்தை ஒட்டிய பகுதி வழியாகத் தன்னுடைய பயணத்தைத் தொடர்கின்றார்கள்.

வழக்கம் போல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஆருயிர்த் தோழர் அபுபக்கர் (ரலி) அவர்களிடம் நிலைமையின் போக்கு பற்றி கலந்தாலோசனை செய்த பொழுது, நாம் எந்த நோக்கத்திற்காக மதீனாவை விட்டுப் புறப்பட்டு வந்திருக்கின்றோமோ, அந்த நோக்கம் தவிர வேறு நோக்கம் எதுவும் கிஞ்சிற்றும் கிடையாது, போர் செய்யும் நோக்கமோ அல்லது குறைஷிகளுடன் விவாதம் செய்யும் நோக்கத்துடனோ நாம் இந்தப் பயணத்தைத் தொடரவில்லை என்பதனை குறைஷிகளுக்குத் தெளிவாக விளங்க வைத்து விட வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம்கள் தங்களது நோக்கத்தைத் தெளிவாகத் தெரிவித்து விட்ட பின்னரும், குறைஷிகளுக்கு திருப்தி ஏற்படாமல், தங்களது தரப்புப் பேச்சுவார்த்தைக்கு உர்வா பின் மஸ்ஊது என்பவரைஇறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் குறைஷிகள் அனுப்பி வைத்தார்கள்.

இப்பொழுது உர்வா ஒரு மிகப் பெரிய பணியைச் செய்ய ஆரம்பித்தார். அதாவது, முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக குறைஷிகள் மிகப் பெரிய படை ஒன்றைத் தயார் செய்து தயாராக வைத்திருப்பதாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை நம்ப வைத்து விட வேண்டும், அவர் மனதில் குறைஷிகளைப் பற்றிய அச்சத்தை ஊட்டி விட வேண்டும் என்பதே உர்வா வின் திட்டமாக இருந்தது.

உர்வா வின் இந்தத் திட்டத்தையும், அவரது ஆணவப் பேச்சையும் பொறுக்க மாட்டதா அபுபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள், கோபம் கொண்டவர்களாக..!

ஓ! கற்சிலைகளான லாத்தையும், உஸ்ஸாவையும் வணங்கக் கூடியவர்களே..! அறிவு கெட்ட நீங்களே போருக்குத் தயாராகி விட்ட பின், அல்லாஹ்வையும், அவனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் மீது இறைநம்பிக்கை கொண்டிருக்கின்ற நாங்களும் உங்களுக்கெதிராகத் தயாரகுவேமே ஒழிய, பயம் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்களை கை கழுவி விட்டுச் சென்று விடுவோம் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள் என்று முழங்கினார்கள்.

யார் இந்த மனிதர்? உர்வா உறும ஆரம்பித்தார்.

இவர் தான் இப்னு அபீ குஹஃபா, என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உர்வா வுக்கு பதிலளித்தார்கள்.

நான் உங்களிடம் தான் பேச வந்திருக்கின்றேன். அவரிடமல்ல. அவருக்கு நான் தகுந்த நேரத்தில் பதில் கூறுவேன் என்று சினந்தான் உர்வா.

உர்வா வினுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை முறிந்து போனதன் பின், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது ஒட்டகையுடன், ஒரு தூதரை அனுப்பி குறைஷிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வரும்படி பணித்தார்கள்.

ஆனால் குறைஷிகளோ, அந்த ஒட்டகத்தின் கால்களை வெட்டி விட்;டார்கள். இந்தச் சம்பவம் நடந்த பின்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், பேச்சுவார்த்தைக்கான கதவை மூடி விடவில்லை. இப்பொழுது உதுமான் பின் அஃபான் (ரலி) அவர்களை குறைஷிகளிடமும், இன்னும் முக்கியமாக அபுசுஃப்யான் மற்றும் மற்ற குறைஷித் தலைவர்களைச் சந்தித்து, முஸ்லிம்கள் வந்த நோக்கத்தை விளக்கி வரும்படி அனுப்பி வைத்தார்கள்.

உதுமான் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் நோக்கத்தை விளக்கியதன் பின்பும், குறைஷிகளின் பிடிவாதம் தளரவில்லை.

உதுமான் அவர்களே..! நீங்கள் வேண்டுமானால் கஃபாவை வலம் வந்து விட்டுப் போங்கள் என்று சலுகை காட்டினார்கள். ஆனால் உதுமான் (ரலி) அவர்களோ, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவை வலம் வராத வரை நான் வலம் வர மாட்டேன் என்று கூறினார்கள்.

இதனைக் கேட்ட குறைஷித் தலைவர்களுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்களை தங்களது பாதுகாப்பின் கீழ் திரும்பிப் போக முடியாத அளவுக்கு தடுத்து வைத்துக் கொண்டார்கள். உதுமான் (ரலி) அவர்களை தடுத்து வைத்துக் கொண்ட செய்தி, இப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்;டார்கள் என்ற வதந்தியாக ஹ{தைபிய்யாவில் இருக்கக் கூடிய முஸ்லிம்களிடம் வந்தடைந்தது.

உதுமான்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுமையான கோபத்திற்கு ஆளானார்கள். இன்னும் கொலைக்குப் பழிக்குப் பழி எடுக்காமல் விடுவதில்லை என்று சபதம் செய்து கொண்டார்கள். இப்பொழுது, தனது தோழர்கள் அனைவரையும் அழைத்தார்கள். புதிதாக உருவெடுத்துள்ள இந்தப் பிரச்னையில், அனைவரும் உறுதியோடு இருந்து போராடுவோம் என்று அனைவரிடம் பைஅத் என்று சொல்லக் கூடிய சத்தியப் பிரமாணம் பெற்றுக் கொண்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தினடியில் நின்று கொள்ள, நபித்தோழர்கள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கையில் கை வைத்து, சபதம் எடுத்து உறுதிப் பிரமாணம் செய்தார்கள். இந்த உறுதிப் பிரமாணத்தைத் தான் இஸ்லாமிய வரலாறு, பைஅத்துர் ரிழ்வான் என்றழைக்கின்றது. மேலும், இந்த உறுதிப் பிரமாணத்தைப் பற்றி திருமறைக்குர்ஆனில் இறைவன் இவ்வாறு சிலாகித்துக் குறிப்பிடுகின்றான் :

முஃமின்கள் அந்த மரத்தடியில் உம்மிடம் வாக்குறுதி செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்களைப் பொருந்தி (ஏற்றுக்) கொண்டான். அவர்களுடைய இதயங்களில் இருப்பதை அவன் அறிந்து, அவர்கள் மீது (சாந்தியையும்) அமைதியை(யும்) இறக்கியருளி, அவர்களுக்கு அண்மையில் வெற்றியையும் அளித்தான்.(48:18)

உதுமான் (ரலி) அவர்கள் அங்கே இல்லாத காரணத்தால், அவர்களுக்காக வேண்டி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தானே பைஅத் எடுத்துக் கொண்டார்கள். தனது கரத்தின் மீது தனது மற்றொரு கரத்தை வைத்து உதுமான் (ரலி) அவர்களுக்காக பைஅத் எடுத்துக் கொண்டார்கள். இந்த பைஅத் நடந்து முடிந்த பின் தான், தமக்குக் கிடைத்த செய்தி தவறான செய்தி என்பதையும், இன்னும் இந்த வருடம் ஹஜ்ஜுச் செய்யாமல் திரும்பி விட்டால், அடுத்த வருடம் தாராளமாக வந்து ஹஜ் செய்து விட்டுப் போகலாம் என்ற நிபந்தனையுடன் கூடிய செய்தியை, சுஹைல் அவர்களிடம் குறைஷிகள் தெரிவித்து அனுப்பி விட்டனர்.

மேலே நடந்த சம்பங்களும் அதில் முஸ்லிம்கள் உறுதியுடன் நிலைத்திருந்ததையும் இறைவன் மிகவும் புகழ்ந்ததோடு, அவர்களைப் பெருமைப்படுத்தியும் விட்டான்.

மிக நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்பு, இருதரப்பிலும் ஒரு முடிவெடுக்கப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்களை இருவரும் எழுதிக் கொள்ளச் சம்மதித்தனர். செய்து கொண்ட ஒப்பந்தமானது குறைஷிகளுக்குத் தான் மிகவும் சாதகமானதாக இருக்கின்றது என்று அபிப்பராயப்பட்ட உமர் (ரலி) அவர்கள், தனது கருத்தை அபுபக்கர் (ரலி) அவர்களிடம் எடுத்துக் கூறினார்கள். உமர் (ரலி) அவர்களது ஆலோசனையை மறுத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களது கருத்தை ஏற்குமாறு ஆலோசனை வழங்கியதோடு, இறைத்தூதர் (ஸல்) அவர்களது வழிமுறையை இறுகப்பற்றிக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். அதனை அடுத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நேரடியாகப் பேசிப் பார்த்து விடுவோம் என்று கிளம்பிய உமர் (ரலி) அவர்கள், தமது கருத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வெளிப்படுத்திய போது, நான் அல்லாஹ்வின் கட்டளைப்படி தான் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றி உள்ளேன் என்று பதில் தந்ததுடன், உமர் (ரலி) அவர்கள் அமைதியாகி விட்டார்கள்.

ஒப்பந்தங்கள் அலி (ரலி) அவர்கள் எழுத, முஸ்லிம்களின் சார்பில் அபுபக்கர் (ரலி), உமர் (ரலி), அலி (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி), சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) மற்றும் பலர் கையெழுத்திட்டார்கள். ஒப்பந்தங்கள் எழுதப்பட்டு முடிக்கப்பட்டவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா மட்டும் செய்து விட்டு திரும்பி விட்டார்கள். அவ்வாறு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் தான் சூரா அல் ஃபத்ஹ் - என்ற அத்தியாயம் இறக்கியருள் செய்யப்பட்டது. இந்த அத்தியாயத்தில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது, ஒரு தெளிவான வெற்றி என அருள் செய்யப்பட்டிருந்தது. இமாம் சுஹ்ரி அவர்கள் இந்த அத்தியாயம் பற்றிக் குறிப்பிடும் போது, ஹ{தைபிய்யா வெற்றியைப் போல வேறு எப்பொழுதும் முஸ்லிம்கள் வெற்றி பெற்றதில்லை, அவ்வளவு மிகப் பெரிய வெற்றியை ஹ{தைபிய்யா உடன்படிக்கை மூலம் முஸ்லிம் அடைந்து கொண்டார்கள் என்று குறிப்பிடுகின்றார்கள். இந்த ஒப்பந்தத்திற்குப் பின், முஸ்லிம்களும் மக்கத்துக் குறைஷிகளும் நட்பு முறையில் சந்தித்துக் கொண்டார்கள், முன்பு இந்த சந்திப்பு போருக்கான சந்திப்பாகத் தான் இருந்தது. இப்பொழுது, இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளாத மக்கள் மத்தியில் இஸ்லாத்தின் தூதை எடுத்துச் செல்வது மிகவும் எளிதாகவும் இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்குப் பின்பு தான் இஸ்லாத்தின் தூதை ஏராளமான பேர்கள் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள். இதுவரை காலமும் ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டு நோக்குவோமானால், ஹதைபிய்யா உடன்படிக்கைக்குப் பின்பு, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை இதுகாலம் வரை ஏற்றிருக்கக் கூடியவர்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆம்! ஹதைபிய்யா உடன்படிக்கையின் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி வந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 1400 தான் இருந்தது. ஆனால் ஹ{தைபிய்யா உடன்படிக்கை நடைபெற்ற பின் இரண்டு ஆண்டுகளில் மக்காவை வெற்றி கொண்டு, மக்காவிற்குள் பிரவேசிக்கும் பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் 10 ஆயிரம் பேர்களுடன் நுழைந்தார்கள் என்று வரலாறு கூறுகின்றது. எனவே, இமாம் சுஹ்ரி அவர்களின் கருத்து முற்றிலும் உண்மையானதே என்று வராற்று ஆசிரியம் இப்னு ஹிஸாம் அவர்கள் கூறுகின்றார்கள்.

0 comments:

Post a Comment