Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part -01



இஸ்லாத்திற்கு முன்பு..!

இஸ்லாத்திற்கு முந்தைய நாட்களில் அபுபக்கர் (ரலி) அவர்களின் இயற் பெயராக அப்துல் கஃபா என்ற பெயர் இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதன் பின் மாற்றம் செய்யப்பட்டு அப்துல்லா என்றழைக்கப்பட்டார். ஆனால் இன்றைக்கு இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலும் சரி அதன் பின்னாளிலும் சரி அவரது இயற் பெயர் மறைந்து அபுபக்கர் சித்தீக் என்றழைக்கப்பட்டார்கள். அபுபக்கர் என்பது அவரது பரம்பரைப் பெயராகவும்
மக்கள் அவரை அன்போடு சித்தீக் என்றும் அழைத்து பின்னாளில் அபுபக்கர் சித்தீக் என்று இன்றும் கூட அதே பெயரில் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்து விட்டது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அபுபக்கர் (ரலி) அவர்களும் இருவரும் முர்ரா என்ற ஒரே வம்சப் பரம்பரையிலிருந்து வந்தவர்கள் தான். அபுபக்கர் (ரலி) அவர்களுடைய தந்தை உதுமான் அபு குகஃபா அவர்கள் இஸ்லாத்தினைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட போது அவர்களுக்கு 90 வயதாகி இருந்தது. அதாவது சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் மக்கா வெற்றியின் போது ஹிஜ்ரி 8 ல் தான் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட 6 வருடங்கள் கழித்து அதாவது உமர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழி நடத்திக் கொண்டிருந்த கால கட்டத்தில் இறந்து விட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களது தாயாரும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இவரும் பனீ தயீம் என்ற இறைத்தூதர் (ஸல்) வழி வந்த குலத்தில் பிறந்தவர்கள் தான்.

யானை ஆண்டு என்று சொல்லக் கூடிய ஹிஜ்ரத்திற்கு முந்தைய 50 ஆண்டுகளும் 6 மாதங்களுக்கு முன்பாக அபுபக்கர் (ரலி) அவர்கள் மக்காவில் பிறந்தார்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அந்த கால கட்டத்திலும் கூட குறைஷிக் குலத்தவர்களில் அபுபக்கர் (ரலி) அவர்கள் நல்ல மரியாதைக்குரிய குறிப்பிடத்தகுந்த ஒருவராகத் திகழ்ந்தார்கள். மக்காவில் இஸ்லாத்திற்கு முந்தைய கால கட்டத்திலும் இன்னும் அதற்குப் பின் வந்த கால கட்டத்திலும் மக்காவில் நன்கு மதிக்கப்பட்ட 10 தலைவர்களில் ஒருவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

இவர் மக்காவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வியாபார நிமித்தமாக அடிக்கடி சிரியா எமன் போன்ற நாடுகளுக்குச் சென்று வரக் கூடியவராக இருந்தார். இவ்வாறு அவர் வியாபார நிமித்தமாக முதன் முதலாக மக்காவை விட்டுச் செல்லும் பொழுது அவருக்கு வயது 18.

இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்வதற்கு முன்பு கூட அபுபக்கர் (ரலி) அவர்களிடம் காணப்பட்ட நல்லலொழுக்கங்கள் பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றுக்காக மக்களிடம் மிகவும் பிரபல்யமான மனிதராகத் திகழ்ந்தார்கள். பிரச்னைக்குரிய விஷயங்களில் மக்கள் இவரிடம் வந்து கலந்தாலோசனை செய்வதும் அவர் கூறக் கூடிய கருத்துக்களுக்கு அதிக மதிப்புக் கொடுக்கக் கூடியவர்களாகவும் மக்கத்து மக்கள் இவரைப் போற்றி வந்தார்கள். அன்றைக்கு மக்காவில் இருந்த மிகப் பெரிய குலத்தவர்களில் மிகவும் செல்வாக்குப் பெற்ற மதிப்புப் பெற்ற குடும்பத்தில் ஒருவராக குறிப்பாக மக்காவில் வசிக்கக் கூடிய குலங்களில் மிகவும் முதன்மை பெற்ற குலங்களில் ஒன்றில் பிறந்த அபுபக்கர் (ரலி) அவர்கள்.

அன்றைய அரபுலகத்தில் கொலைக்குப் பகரமாக இரத்த இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் வழக்கமிருந்தது. அவ்வாறு பெறக் கூடிய பணம் அபுபக்கர் (ரலி) அவர்களின் சம்மதமில்லாமல் பெறப்படுவதில்லை என்றதொரு நிலை கூட அன்றைய நாட்களில் நிலவி வந்தது. கவிதை புனைவதில் மிகுந்த திறமை பெற்றவராக இருப்பினும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின் அதனை முழுமையாக விட்டொழித்து விட்டார். இன்னும் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்பு கூட மதுவின் வாடையைக் கூட நுகராத மனிதராகத் திகழ்ந்தவர் தான் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு..!

இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் மக்காவைத் தரிசப்பதற்கு முன்புள்ள கால கட்டத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடிக்கடி பார்த்துப் பேசி வரும் வழக்கமுள்ளவராக அபுபக்கர் (ரலி) அவர்கள் இருந்தும் இஸ்லாமிய அழைப்பு முதன் முதலாக விடுக்கப்பட்ட அந்த நாட்களில் அவர் எமன் தேசத்திலிருந்தார். பின் எமனிலிருந்து திரும்பி மக்கா திரும்பியவரை அபு ஜஹ்ல் உத்பா ஷைபா போன்ற மக்காவின் மிகப் பிரபலங்கள் அவரைச் சென்று சந்தித்து மக்காவின் வெளிச்சப் புள்ளியை விட்டில் பூச்சியாக்க நினைத்தனர்.

வீட்டிற்கு தன்னைப் பார்க்க வந்த அபு ஜஹ்ல் உத்பா ஷைபா போன்றோரை விளித்து என்ன விஷயமாக வந்திருக்கின்றீர்கள் ஏதேனும் விசேஷ செய்தி உண்டா? என்று அவர்களைப் பார்த்து அபுபக்கர் (ரலி) அவர்கள் வினவுகின்றார்கள்.

ஆம்! அது ஒரு மிகப் பெரிய செய்தி..!

அபூதாலிப்பின் பாதுகாப்பில் வளரக் கூடிய அந்த அநாதை தன்னை ஒரு இறைத்தூதரென்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார்.

நாங்கள் உங்களுடைய வருகைக்காகத் தான் காத்திருக்கின்றோம். நீர் வந்தவுடன் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் இன்னும் இதில் உம்முடைய ஆலோசனை என்ன என்பதையும் நாங்கள் அறிய மிக ஆவலாக இருக்கின்றோம். அதற்காகத் தான் உங்களது இல்லமும் வந்தோம் என்று தாங்கள் வந்தததன் நோக்கத்தை அந்த நச்சவரங்கள் வெளிப்படுத்தின. இல்லை விஷத்தைக் கக்கினர்.

விஷங்கள் விருட்சங்களை என்ன செய்யும்..! செய்தியைக் கேள்விப்பட்ட அபுபக்கர் அவர்கள் தன்னைப் பார்க்க வந்த பெருந்தலைகளை விட்டு விட்டு தன் ஆருயிர்த் தோழரைக் காண விரைந்து செல்கின்றார்.

தோழரே..! நான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா?

ஆம்! என்றுரைத்தார் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

உங்களுடைய அந்த அழைப்பின் அர்த்தம் என்ன?

லா இலாஹ இல்லல்லாஹ்! முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!

என்ற ஓரிறைக் கொள்கையின் தத்துவத்தை அபுபக்கர் அவர்களுக்கு அண்ணலார் (ஸல்) அவர்கள் விளக்குகின்றார்கள்.

இஸ்லாத்தை பற்றி இதற்குப் பிந்தைய நாட்களில் கேள்விப்பட்ட அனைவரும் அந்தக் கொள்கையை முன்பு மறுத்து அல்லது தாமதப்படுத்தியோ தான் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அபுபக்கர் அவர்களோ அழைப்பின் வெளிச்சப் புள்ளியைக் கண்டவுடன் தானே சூரியனாக மலர்ந்து நின்றார்கள். உடனே ஏற்றுக் கொண்டார்கள். எந்தவித சுணக்கமும் அவர்கள் காட்டவில்லை என்பது அவருக்கு இறைக் கொள்கையின் மீதுள்ள பற்றும் இன்னும் அதனைக் கொண்டு வந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மீதிருந்த நம்பிக்கை மற்றும் அன்பும் தான் காரணமாகும்.

அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களின் வரிசையில் அதாவது வயது வந்தோர்களின் வரிசையில் முதலாவது நபராகவும் இன்னும் சிறுவர்களின் வரிசையில் அலி (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள். இன்னும் கதீஜா (ரலி) அவர்கள் பெண்களில் முதலாவது நபராகவும் இருந்தார்கள். அடிமைகளில் ஜைத் பின் ஹாரிதா (ரலி) அவர்கள் முதலாவது நபராகவும் இருந்தார்கள்.

முதல் வசனம் இறங்கியதன் பின்பு ஏழு நாட்களில் கழித்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள். ஆனால் அபுபக்கர் (ரலி) அவர்களும் அலி (ரலி) அவர்களும் இவருக்கு முன்பாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

எப்பொழுது இஸ்லாத்தை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களோ அப்போதிருந்திருந்தே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக தனது உடல் பொருள் ஆவி திறமைகள் அனைத்தையும் வழங்கினார்கள்.

அவரது வாழ்க்கை முழுவதுமே தான் ஏற்றுக் கொண்ட கொள்கைக்காக மாசு மறுவில்லாமல் அவர் தன்னையே இழந்த சரித்திரச் சான்றுகளைத் தான் நாம் காண முடியும். இன்னும் ஹஸ்ரத் உதுமான்(ரலி) சுபைர்(ரலி) தல்ஹா(ரலி) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) போன்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஸாபிக்கூன் அவ்வலூன் என்ற இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முன்னோடிகளில் அபுபக்கர் (ரலி) அவர்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவராக கணிக்கப்பட்டதற்குக் காரணம் அவரது அப்பழுக்கில்லாத தியாக வாழ்வு தான் என்றால் அதில் மிகையில்லை.

இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டமைக்காக ஏகப்பட்ட அடிமை முஸ்லிம்கள் அவர்களது எஜமானர்களால் துன்புறுத்தப்பட்ட பொழுது அந்தக் கொடுமையைச் சகிக்காது தன்னுடைய சொந்த செல்வத்தைக் கொடுத்து அந்த அடிமை வாழ்வு வாழ்ந்த முஸ்லிம்களை விடுதலை செய்த பண்பாளராக அபுபக்கர் (ரலி) அவர்கள் திகழ்ந்தார்கள்.

அற்பணம் மற்றும் தியாகம்

இஸ்லாத்தின் அந்த ஆரம்ப மூன்று வருடங்கள் இஸ்லாத்தின் அழைப்புப் பிரச்சாரம் பணி மிகவும் ரகசியாகவே நடந்து வந்தது. அந்த கால கட்டத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அழைப்பிற்கான தனது பங்களிப்பையும் மிகவும் ரகசியமாகவே செய்து வந்தார்கள். அதன் நான்காவது வருடம் கீழக்காணும் வசனம் இறங்கியது.

உமக்குக் கட்டளையிடப் பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக! இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணித்துவிடவீராக! (15:94)

மேற்காணும் வசனம் இறங்கியவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பிரச்சாரத்தை வெளிப்படையாகச் செய்ய ஆரம்பித்தார்கள். இணை வைத்து வணங்கும் அந்தக் கொடிய செயலைச் சாடினார்கள். அவர்களது அறியாமையை இடித்துரைத்தார்கள். அழைப்புப் பணியின் இந்த ஆரம்ப தருணங்கள் இஸ்லாத்தின் கொடிய விரோதிகளை மிகவும் உசிப்பேற்றி விட்டது. இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் போர்ப் பிரகடனத்தையே செய்தார்கள் என்றால் அது மிகையில்லை. இன்னும் அவர்கள் எந்தளவு கொடுமைகளைக் கட்டவிழ்த்து விட்டு இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகளை பனிப் புகை கொண்டு மறைத்து விடலாம் என்று கூடக் கனவு கண்டார்கள். இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது சொல்லொண்ணா துன்பத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள்.

இந்தக் கொடுமையான தருணங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது புரியப்பட்ட கொடுமைகளை தானும் பங்கு போட்டுக் கொண்டு தனது தலைவரது சுமையைக் குறைக்;கவும் செய்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் அழைப்பானது தங்களது கடவுள்களுக்கு அவமரியாதையை ஏற்படுத்தி விட்டது தங்களது கடவுள்களின் பெருமை போய் விட்டது என்றும் இன்னும் தங்களது கடவுள்களின் கீர்த்திகளைப் பற்றியும் மக்காவின் அந்த கஃபா எல்லையில் உட்கார்ந்து கொண்டு அந்த குறைஷிகள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த நேரத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவினுள் நுழைகின்றார்கள். இதைக் கண்ட அவர்களது கோபம் இன்னும் தலைக்கேறியது. அதில் ஒருவன் எழுந்து வந்து நீர் தானா எங்களது கடவுளர்களை விமர்சித்துப் பேசித் திரிவது? என்று கேட்டான்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களோ! எந்த பயமுமின்றி ஆம்! நான் தான்! என்றார்கள். இதைக் கேட்ட அத்தனை குறைஷியர்களும் ஒட்டுமொத்தமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது விழுந்தார்கள், இன்னும் அவர்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டே நீர் தானா எங்களது இத்தனை கடவுள்களுக்கும் பகரமாக ஒரே ஒரு கடவுளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்? என்று கேட்டுக் கொண்டு அடித்துக் கொண்டிருக்கும் போதே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது சுயநினைவை இழந்து மயங்கிக் கீழே விழுந்தார்கள்.

அந்தத் தருணத்தில் அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது ஆருயிர்த் தோழரை அந்த இஸ்லாத்தின் எதிரிகளிடமிருந்து காப்பாற்ற விரைந்து வந்தார்கள். அந்த மடையர்களிடம் கேட்டார்கள் :

அல்லாஹ் தான் எனது இறைவன் அவன் தான் அகில உலகங்களையும் பரிபாலிக்கக் கூடியவன் என்று கூறியதற்காகவா அவரை நீங்கள் கொலை செய்யப் பார்க்கின்றீர்கள்? நீங்கள் அத்துமீறிய சமுதாயமாகவல்லவா இருக்கின்றீர்கள்? என்று கூறிக் கொண்டிருக்கும் போதே அவரையும் அவர்கள் தாக்க ஆரம்பித்தார்கள் இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது மண்டை உடைந்து இரத்தம் கொட்ட ஆரம்பித்தது. இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்களது உறவினர்கள் விரைந்து வந்து எதிரிகளிடமிருந்து இருவரையும் காப்பாற்றுகின்றனர்.

தலையில் அடிபட்டு இரத்தம் வழிந்து கொண்டிருந்த அந்த நிலையிலும் அவர்களது உதடுகள் தன்னைப் படைத்த இறைவனையும் திருத்தூதர் (ஸல்) அவர்களையும் கண்ணியப்படுத்திக் கொண்டே இருந்தது.

படுகாயமுற்ற அபூபக்கர் (ரலி) அவருடைய இல்லத்திற்க எடுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. நீண்ட நேரத்திற்குப் பின் அவருக்கு சுயநினைவு வந்தது. எனினும் உடலெல்லாம் இருந்த இரத்தக் காயங்களின் வேதனைகள் காரணமாக முனகிய போது அவரருகே கவலையே உருவாக இருந்த அவரது அன்னை துடிதுடித்துப் போனார்!

சற்று நேரத்திற்குப் பின் அவர் பேசும் நிலையை அடைந்தார். அதுகண்ட அவரது அன்னை தன் மகனின் காயங்களுக்குக் கட்டுப் போட்டு விட்டு அன்புடன் தலையை வருடிக் கொண்டே மகனே! உனக்கு எப்படி இருக்கின்றது? என்று வினவினார்.

ஆனால் அபுபக்கர் (ரலி) அவர்களோ அன்னைக்கு உடனடியாகப் பதில் கூறவில்லை. மாறாக சற்று தாமதித்து அம்மா! அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பற்றி எனக்குக் கூறுங்கள். அவர்கள் எங்கு இருக்கின்றார்கள்? எப்படி இருக்கின்றார்கள்? அவர்களுக்கு ஆபத்து ஏதும் இல்லையே? என்று மிக மெதுவாகக் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார்.

இந்த இக்கட்டான நிலையிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றியல்லவா இவர் பேசுகின்றார்? இவர் அவரிடம் எத்தகைய பற்றும் பாசமும் வைத்திருப்பார் என வியப்புற்ற நிலையில் அவ்வன்னை அபூபக்கர் (ரலி) அவர்களை ஆர்வத்துடன் நோக்கினார்.

பின்னர் அன்புள்ள என் மகனே! நீ உன் காயங்களைப் பற்றியோ அவை தரும் வேதனையைப் பற்றியோ கவலைப்படவில்லை. ஆனால் அந்த நண்பரைப் பற்றித்தான் கவலைப்படுகின்றாய்! அது தான் உன் உள்ளத்தில் மிகைத்து நிற்கிறது. அந்த அளவு அவர் மீது பாசம் கொள்ள அவர் என்ன செய்தாரோ? நீ ஏதோவொன்றினால் ஆட்கொள்ளப்பட்டுள்ளாய் எனத் தெரிகிறது. கவலைப்படாதே! மகிழ்ச்சியாக இரு! உனது நண்பர் எந்தப் பிரச்னையும் இல்லாது நல்ல நிலையில் இருக்கின்றார். அவருக்காக வருத்தப்படுவதை விட்டு விட்டு உன் நிலை எப்படி எனக் கூறு! எனக் கண்ணீர் பெருக அந்த அன்னை வேண்டி நின்றார்.

இப்படி தாயும் மகனும் சற்று நேரம் உரையாடினர். அப்போது தாயாருடைய கருத்துக்கள் புதியதொரு கோணத்திலிருந்து வருவதை உணர்ந்த அபூபக்கர் (ரலி) அவர்கள் அன்னையை அன்புடன் உற்று நோக்கினார். அன்னை இஸ்லாத்தை அறியும் ஆவல் கொண்டுள்ளார் என்பதை உணர்ந்த அவருக்கு இருப்புக் கொள்ளவில்லை. மகிழ்ச்சி மிகுதியால் தம் உடற்காயங்களைக் கூட மறந்து விட்டார்! ஆமாம் இப்படியான மகிழ்ச்சியும் மனநிறைவும் அவரது வாழ்வில் என்றுமே இருந்ததில்லை என்ற உணர்வு அவருக்கு எற்பட்டு விட்டது.

அன்றிரவு அதிக நேரத்தை தம் அன்னையுடன் கழித்த அபூபக்கர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தின் மேன்மை இறைத்தூதரின் உயர் குணங்கள் என்பன பற்றி அழகாகவும் தெளிவாகவும் எடுத்துக் கூறினார்கள். அவர்களது உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட்ட அந்தக் கருத்துக்கள் அந்த அன்னையின் இதயக் கதவுகளைத் தட்டித் திறந்து கொண்டு உள்ளே சென்றன! ஏற்கனவே தம் மைந்தனின் நற்பண்புகளை நன்கு அறிந்திருந்த அவ்வன்னை அதே மகன் மூலம் இஸ்லாத்தைத் தெரிந்து கொண்ட போது புத்துணர்வு பெற்றார். படிப்படியாக அவரிடம் பல மாற்றங்கள் நிகழலாயின.

மறுநாள் காலை உம்முல் கைர் என அழைக்கப்பட்ட சல்மா பிந்தி சக்ர் அதாவது அபூபக்கர் (ரலி) அவர்களின் அன்னை இஸ்லாத்தைத் தழுவும் ஆர்வம் கொள்ளவே அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார். அபூபக்கர் (ரலி) அவர்கள் அப்பொழுது நபிகளார் அர்கம் இப்னு அர்கம் அவர்களது இல்லத்தில் இருந்தார்கள்.

அபூபக்கர் (ரலி) அவர்களுக்குக் குறைஷியர் செய்த கொடுமைகள் நபி (ஸல்) அவர்களது செவிகளுக்கும் எட்டியிருந்தன. அதனால் பெரிதும் கவலை அடைந்திருந்தார்கள். துன்பம் தோய்ந்த முகத்துடன் வேதனைத் தாளாது வருவார் அபூபக்கர் என்பதை நினைக்க நினைக்க நபிகளாரின் உள்ளம் கடும் வேதனைப்பட்டது.

ஆனால் அன்று காலை திடீரென மலர்ந்த முகத்துடன் அங்கு வந்த அபூபக்கர் (ரலி) அவர்களைக் கண்டதும் உளம் பூரித்துப் போனார்கள். கூடவே அவரது அன்னையும் வந்திருப்பது நபிகளாருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்து விட்டது.

நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் தான் தாமதம் அஸ்ஸலாமு அலைக்கும் யா ரஸ_லுல்லாஹ்! என மொழிந்தவாறே அவர்களைக் கட்டித் தழுவினார் அபூபக்கர் (ரலி) அவர்கள்.

நபி (ஸல்) அவர்களும் அதே பாசவுணர்வுடன் "வ அலைக்குஸ்ஸலாம் அபூபக்கரே!" என்று பதிலிறுத்ததுடன் என்னுயிர் நண்பா! இறையருளால் நலமாக இருக்கின்றீர்கள் அல்லவா? என வாஞ்சையுடன் வினவினார்கள்.

ஆமாம்! யா ரஸ_லுல்லாஹ்! என் பெற்றோர் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் நலமாக இருக்கின்றேன். என்னைப் பெற்ற அன்பு அன்னை சத்தியத்தை ஏற்க வந்துள்ளார். கருணையுடன் அதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்! என பணிவன்புடன் பதில் கூறினார் அபூபக்கர் (ரலி) அவர்கள்.

கருணையே உருவான நபி (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய இனிய விளக்கமொன்றை அந்த அம்மையாருக்கு வழங்கினார்கள். அடுத்து, அவர் ஏகத்துவ கலிமாவை மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டார்.

இவருடன் இஸ்லாத்தைத் தழுவிய மக்காவாசிகளின் எண்ணிக்கை நாற்பதாக உயர்ந்தது. இந்த வளர்ச்சி முஸ்லிம்களுக்கு மட்டிலா மகிழ்ச்சியைக் கொடுத்தது எனலாம்.

எனினும் அபூபக்கர் (ரலி) அவர்களின் பனூதமீம் கோத்திரத்தினரிடையே ஆத்திரமும் அமைதியின்மையும் அலை மோதிக் கொண்டிருந்தன. எந்த நேரத்திலும் எதுவும் நிகழலாம் என்ற பதற்ற நிலை எங்கும் நிலவியது.

இஸ்லாத்தின் ஆரம்ப காலங்கள் எவ்வாறு கொடுமையாக இருந்தது என்பதை கீழ்க்காணும் சம்பவம் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். புகாரீ என்ற நபிமொழித் தொகுப்பில் காணப்படக் கூடிய இந்தச் சம்பவம் இன்றைக்கும் நமக்கு நல்லதொரு படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது.

ஒருமுறை கஃபாவின் சுவரின் மீது சாய்ந்து கொண்டிருந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கப்பாப் (ரலி) அவர்கள் கேட்டார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களே! எதிரிகளின் கொடுமை தாங்க முடியாத அளவு உள்ளது. நீங்கள் எங்களுக்காக இறைவனிடத்தில் பிரார்த்திக்கக் கூடாதா? எங்களது சிரமங்களை அதன் மூலம் போக்கக் கூடாதா? என்று தான் கேட்டார்கள்.

அமைதியாக இருந்த அந்த வதனம் கோவைச் சிவப்பாகியது இறைத்தூதர் (ஸல்) அவர்களது வதனமும் மட்டுமல்ல வார்த்தைகளும் கூட சூடாக வந்தது. தோழரே! உங்களுக்கு முன் ஒரு சமுதாயம் உங்களைப் போலவே இறைநம்பிக்கை; கொண்டிருந்தது. அதன் காரணமாக அவர்களது எலும்புகள் தெரியும் அளவுக்கு இரும்புச் சீப்பு கொண்டு சதைகள் சீவப்பட்டன. அவர்களது தலைகள் வேறாகவும் முண்டங்கள் வேறாகவும் இரு கூறாகப் பிளக்கப்பட்டன. இன்னும் நிச்சயமாக! சன்ஆ விலிருந்து ஹதரல்மவ்த் என்ற இடம் வரும் வரையும் ஒரு குதிரை வீரன் தன்னந்தனியாக இறைவனைப் பற்றிய அச்சத்தைத் தவிர வேறு எந்த அச்சமுமின்றி பயணம் செய்யக் கூடிய நிலை வரும் நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அதில் எந்த சந்தேகமும்பட வேண்டாம் என்று கூறி முடித்தார்கள்.

0 comments:

Post a Comment