Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-13


பொய்த் தூதர்கள் கொல்லப்படுதல்

இப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் சென்ற படை மதீனாவில் இருந்து நிறைவாக ஓய்வெடுத்திருந்தது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேவையான அளவுக்கு ஜகாத் - லிருந்து நிதியும் வந்து சேர்ந்திருந்தது. இப்பொழுது அப்ரக் கில் தங்கிக் கொண்டு, பொய்த் தூதர்களின் அட்டகாசங்களை அடக்குவதற்குண்டான தயாரிப்புகளைச் செய்ய
ஆரம்பித்தார்கள் கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள். பொய்த் தூதர்களின் கொட்டங்களை அடக்குவதற்கென்றே, பதினொரு படைப் பிரிவுகளை உருவாக்கி, நாட்டின் பல பாகங்களுக்கு அந்தப் படைகளை அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இன்றைக்கு இருப்பது போல அன்றைய நாட்களில் கூலிக்கு ஆள் அமர்த்திப் போராடும் படைப் பிரிவுகள் இருக்கவில்லை. முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன், தங்களது உயிர், பொருள், உடமைகளை அற்பணிக்க முன் வந்ததோடு, அதற்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளும் எண்ணத்துடன் மட்டுமே போர்க் களத்திற்குள் நுழையக் கூடியவர்களாக இருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் சரி, அவர்களுக்குப் பின் வந்த அபுபக்கர் (ரலி) போன்ற கலீபாக்களின் காலத்திலும் சரி, முஸ்லிம்களைக் கொண்ட படை உருவாக்கப்பட்டு, அதற்கு ஒரு தலைமையையும் நியமித்ததோடு, அந்த ஒரு தலைமையின் கீழ் பல குலத்தைச் சேர்ந்த முஸ்லிம்களைக் கொண்டு படையை ஒருங்கிணைத்து, அந்த ஒவ்வொரு பிரிவின் தலைமையின் கைகளிலும் அவர்களின் கொடியையும் வழங்கி, போருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். அந்தக் கொடியை ஏந்தி இருப்பவர் எங்கே செல்கின்றாரோ, அவரைப் பின்பற்றிச் செல்ல வேண்டியது அந்தந்தக் கொடிக்குரிய குலத்தவர்களின் கடமையாகவும், இன்னும் அவர் படை நடத்திச் சென்றால் அவருக்குப் பின்னால் தங்களது இளவல்களை அனுப்பி அவருடன் சேர்ந்து கொள்ளச் செய்வதும் அந்தந்தக் குலத்தவர்களின் பொறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு படை வீரரும் தனது சொந்தச் செலவில் போர்க் கருவிகளையும், வாகனங்களையும் வாங்கி போருக்குத் தயாராக வேண்டியவராவார், இன்னும் அதற்கு வசதியற்றவர்களுக்கு நிதிக் கருவூலகத்திலிருந்து உதவியும் செய்யப்படும். இந்த வழிமுறை நன்றாக அந்தக் காலத்தில் வேலை செய்ததோடு, ஒவ்வொருவரும் தங்களது சொந்த உபயோகத்திற்கென்றே ஆயுதங்களைப் பெற்றிருந்ததும், அவர்கள் போருக்குத் தயாராகும் பணியை மிகவும் எளிதாக்கியது.

மேலே நாம் விவரித்த வண்ணம், துல் கஸ்ஸாவில் இருந்து கொண்டு அபுபக்கர் (ரலி) அவர்கள் பதினொரு படைப் பிரிவுகளைத் தயாரித்ததோடு, அதற்கு பதினொரு தலைமையையும் நியமித்ததோடு, எந்தத் தலைமையுடன் எந்தக் குலத்தவர்கள் இணைந்து கொள்வது என்ற திட்டத்தையும் அறிவித்தார்கள். ஒவ்வொரு தலைமையும், அவரவர்க்கென்ற தனிப்பட்ட உத்தரவுகளை கலீபாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். இதற்கு முன் சந்தித்த எதிரிகளுக்கும், இப்பொழுது சந்திக்கப் போகும் எதிரிகளுக்கும் மிகவும் வித்தியாசமிருந்தது, எனவே, அதனைக் கருத்தில் கொண்டு எவ்வாறு தாக்குதல் தொடுப்பது, போரை ஆரம்பிப்பது என்பன போன்ற அறிவுரைகளைத் தனது தளபதிகளுக்கு வழங்கி, அவர்களை அனுப்பி வைக்க ஆரம்பித்தார்கள்.

இந்த அடிப்படையில், காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் துலைஹா என்பவனுக்கு எதிராகவும், இக்ரிமா (ரலி) அவர்கள் முஸைலமாவுக்கு எதிராகவும், சுபைர் (ரலி) அவர்கள் அஸ்வத் அன்ஸிக்கு எதிராகவும் அனுப்பி வைக்கப்பட்ட முக்கியத் தோழர்கள் ஆவார்கள்.

இன்னும் பொதுவான சில உத்தரவுகளை அனைத்து தளபதிகளுக்கும் கலீபா அவர்கள் வழங்கினார்கள். இந்த உத்தரவுகளில் எதிரிகளை எதிர்த்துப் போர் தொடுப்பதற்கு முதலாக, அவர்களிடம் இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளும்படியும், இஸ்லாத்திற்கு எதிரான அனைத்து நடடிவக்கைகளையும் கைவிடும்படியும் விண்ணப்பித்துக் கொள்வது. இன்னும் சமாதான ஒப்பந்தங்களைச் செய்வதற்கு முன் வரும்பட்சத்தில், போர் நடவடிக்கைகளைக் கைவிடுவது போன்ற முறைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும், இவற்றில் எதுவுமே அவர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத பட்சத்தில், இறுதி நடவடிக்கையாக போரைத் துவங்கும்படியும் கலீபா அவர்கள் அனைத்துத் தளபதிகளுக்கும் பொதுவான உத்தரவு ஒன்றை பிறப்பித்து, அவர்களை அனுப்பி வைத்தார்கள்.

கலீபா அவர்களால் உருவாக்கி வழங்கப்பட்ட பிரமாணங்களை, ஒருவர் முதலில் சென்று எதிரிகளிடம் வாசித்துக் காட்டுவது, அதற்காக அங்கு அதான் சொல்லப்பட்டு மக்களை ஒன்று திரட்டுவது. இவ்வாறு ஒன்று திரட்டப்பட்ட மக்களிடம் கலீபாவின் பிரமாணங்களை வாசித்துக் காட்டுவது, இதனைச் செவியுற்று விட்ட பின் எவர், அதனை ஏற்காது அங்கிருந்து திரும்பிச் சென்று விடுகின்றாரோ அவரை இஸ்லாத்தின் எதிரியாகக் கணிப்பிடுவது, அவர்களை ஒடுக்குவது என்பது தான் முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. இதுவல்லாமல், இன்னும் சில கட்டளைகளையும் ஒவ்வொரு தளபதிகளுக்கும், அவரவர் செல்லக் கூடிய பகுதிகளுக்கு ஏற்றவாறு உத்தரவுகளும் வழங்கப்பட்டன.

இந்த விரிவான அடிப்படையில் பதினொரு படைப்பிரிவுகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பதினொரு படைப்பிரிவுகளின் பணிகள் பற்றி நாம் இங்கு நோக்குவது, மிகுந்த சிரமமான ஒன்று என்பதால், குறிப்பிட்ட சில படைப்பிரிவுகளின் பணிகள் குறித்து நாம் இங்கு சிறிது நோக்குவோம்.

0 comments:

Post a Comment