Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-12

மதீனாவின் மீதான தாக்குதல் முறியடிப்பு

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தானே முன்னின்று செய்ய ஆரம்பித்தார்கள். அலீ (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), மற்றம் அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோர்களை நகரின் முக்கியப் பகுதிகளின் பாதுகாப்புப் பொறுப்பை வழங்கி, அவர்களின்
கண்காணிப்பில் விட்டிருந்தார்கள். இப்பொழுது, தனது மக்களை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் நகரின் பாதுகாப்பு மற்றும் எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கொடுக்க ஆரம்பித்து, மதீனாவைப் பாதுகாப்பதற்கு உண்டான அனைத்து நடவடிக்கைகளிலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டிக் கொண்டதோடு, எதிரிகள் எந்த நேரத்திலும் தாக்க ஆரம்பிக்கலாம் எனவே, முழுத் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார்கள். ஏனெனில், அபுபக்கர் (ரலி) அவர்களின் சமாதான ஒப்பந்தத்தை, இந்த எதிரிகள் உதாசினம் செய்து விட்டதும், இந்த பாதுகாப்பு நடவடிக்கையை துதரிப்படுத்த வேண்டியதும் அவசியமாயிற்று. சமாதானத் தூதுக் கமிட்டி திரும்பி வந்ததன் பின் மூன்று நாட்கள் கழிந்திருந்த நிலையில், எதிரிகள் இப்பொழுது தங்களது இருப்பிடங்களை விட்டு விட்டு, முஸ்லிம்களைத் தாக்கும் நோக்கத்துடன் வெளியே வர ஆரம்பித்தார்கள். இவர்கள் அனைவரும் தீ ஹஸ்ஸி என்ற இடத்தில் குழு ஆரம்பித்தார்கள்.

ஏற்கனவே மதீனாவின் புறநகர்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் படை, இந்த எதிரிகளின் நடவடிக்கைகள் குறித்து, கலீபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்பி வைத்தார்கள். கலீபா அவர்களோ, தான் வரும் வரை அந்த இடத்திலேயே இருக்கும்படியும், தனது வருகைக்காகக் காத்திருக்கும்படியும் உத்தரவிட்டார்கள். அபுபக்கர் (ரலி) அவர்களுடன் வந்திருந்த தோழர்களும், இன்னும் பொதுமக்களும் இப்பொழுது தாக்கும் நோக்குடன் வந்திருக்கும் எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்ததோடு, அவர்களைத் திரும்பி ஓடவும் வைத்தார்கள். ஆனால், இந்தப் பணி சுலபமான பணியாக முஸ்லிம்களுக்கு இருக்கவில்லை.

ஏனெனில், எதிரிகள் செய்த சதிச் செயலின் விளைவாக முஸ்லிம்கள் பின்வாங்கவும் நேரிட்டது. காற்றடைக்கப்பட்ட தோல் பைகளை, பாதையெங்கும் பரப்பி வைத்திருந்ததன் காரணமாக, அதன் மேல் கால் வைத்த ஒட்டகங்கள், மிரண்டு மதீனாவின் பக்கம் திரும்ப ஆரம்பித்தன. முஸ்லிம்களின் படைகள் இவ்வாறு திரும்பி ஓட ஆரம்பித்தது எதிரிகளுக்கு மிகவும் மன ஊக்கத்தை அளித்ததோடு, மேலும் படைகளை முஸ்லிம்களை எதிர்த்துக் குவிக்க ஆரம்பித்தார்கள்.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள், அன்றைய தினமே புதிய உத்வேகத்துடனான தாக்குதல் ஒன்றைத் தொடுக்க ஆரம்பித்தார்கள். இரவோடிரவாக எதிரிகளின் மீது தாக்குதல் தொடுக்க ஆரம்பித்த அவர்கள், அன்றைய மதிய வேளைக்கு முன்பாகவே எதிரிகளைத் துவம்சம் செய்து, அவர்களைத் தோற்கடித்ததோடு, தீ ஹஸ்ஸியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து விட்டார்கள்.

இந்த நடவடிக்கையின் காரணமாக, துலைஹா என்ற பொய்த் தூதனின் தளபதியாக இருந்தவனும், ஆதரவாளனாக இருந்தவனுமான ஹப்பல் என்பவனின் தலை துண்டிக்கப்பட்டது. மதீனாவின் பாதுகாப்புப் பொறுப்பை நுஃமான் பின் மக்ரான் (ரலி) என்பவரது தலைமையில் அமைந்த சிறு படையின் பொறுப்பில் விட்டு விட்டு, தப்பித்து ஓடியவர்களை துல் கஸ்ஸா வரைக்கும் விரட்டிச் சென்றார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள்.

முஸ்லிம்களின் இந்த வெற்றி எதிரிகளுக்கு எரிச்சலைக் கொடுக்க ஆரம்பித்தது. தங்களது குலத்தவர்களில் யார் யாரெல்லாம் இஸ்லாத்தின் ஆதரவாளர்களாக இருக்கின்றார்களோ, அவர்களை நோவினை செய்ய ஆரம்பித்தார்கள். முஸ்லிம்களின் அங்கங்கள் சிதைக்கப்பட்டன, அவர்களில் சிலரை எரிக்கவும் செய்தார்கள் எதிரிகள். இந்த கொடுமையான செய்திகள் அரபுலக மெங்கும் பரவ ஆரம்பித்தவுடன், இது மாதிரியான கொடுமைகளை முஸ்லிம்களின் மீது அனைத்து எதிரிகளும் புரியத் தலைப்பட்டார்கள்.

முஸ்லிம்களின் மீது புரியப்படுகின்ற இந்த அடக்கு முறைகளையும், சித்தரவதைகளையும் பற்றிக் கேள்விப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், எதிரிகளுக்குச் சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். துல் கஸ்ஸா வில் கிடைத்த வெற்றியின் காரணமாக, முஸ்லிம்களின் இறைநம்பிக்கையின் வேகம் அதிகரித்திருந்தது. மனதளவில் அவர்கள் மிகவும் பலம் மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கையையும் பெற்றிருந்தார்கள். இன்னும் சில முஸ்லிம்கள், தங்களது பகுதியிலிருந்து ஜகாத் பணத்தைக் கூட, தலைநகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைத்திருந்த படைகள் வரும் வரை தலைநகரைப் பாதுகாப்பதற்குண்டான அனைத்து ஏற்பாடுகளையும் கலீபா அவர்கள் செய்து வைத்திருந்தார்கள். இப்பொழுது, உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த படை வந்தவுடன், அவர்களின் பொறுப்பில் மதீனா நகரின் பாதுகாப்பை வழங்கி விட்டு, அந்தப் படைப்பிரிவு மதீனாவைப் பாதுகாப்பதோடு, சற்று ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்று கலீபா அவர்கள் முடிவெடுத்து, அதன் படியே செய்தார்கள்.

பின்பு, மற்ற முஸ்லிம்களை ஒன்று திரட்டிக் கொண்டு, தன்னுடைய தலைமையின் கீழ் ஒரு படையைத் தயார் செய்து, புறப்பட ஆயத்தமானார்கள். ஆனால், அபுபக்கர் (ரலி) அவர்களது சொந்த தலைமையின் கீழ் மதீனாவை விட்டும் படைகள் புறப்படுவதை, சில தோழர்கள் மறுபரீசீலனை செய்யும்படி கலீபாவை வேண்டிக் கொண்டார்கள். அதாவது, கலீபாவுக்கு நேரக் கூடிய சிறு காயம் கூட, மதீனாவின் நிர்வாக இயந்திரத்தை பலமிழக்கச் செய்து விடும், இன்னும் தேவையில்லாத குழப்பங்கள் பரவுவதற்குக் காரணமாகி விடும் என்று அவர்கள் எதிர்பார்த்ததே, இதன் காரணமாகும். படையின் தளபதிப் பொறுப்பை யாராவது ஒருவரது தலைமையின் கீழ் விடுவது, அவர் இறந்து விட்டால் இன்னொருவரை நியமித்துக் கொள்வது என்ற அடிப்படையில், படையின் தலைமைப் பொறுப்பில் இருந்து அபுபக்கர் (ரலி) அவர்கள் விலகி, மேற்படி செயல்முறைத் திட்டத்தின் படி, படையை நகர்த்துவது என்று ஆலோசனை கூறப்பட்டது. ஆனால், இதற்குச் சம்மதிக்க மறுத்து விட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது தலைமையின் கீழ் படையை நகர்த்துவது என்று இறுதியாக முடிவெடுத்து, அதன்படியே, படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்று படையை நகர்த்த ஆரம்பித்தார்கள் அபுபக்கர் (ரலி) அவர்கள். படை இப்பொழுது துல்கஸ்ஸா வழியாக, ரப்தா என்ற பகுதியில் உள்ள அப்ரக் என்ற இடத்தை அடைந்தது. எதிரிகள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது, எதிரிகள் நிர்மூலமாக்கப்பட்டார்கள். அப்ரக் இப்பொழுது, முஸ்லிம் படைகளில் உள்ள குதிரைகளுக்குரிய தீவனத்தை உற்பத்தி செய்யக் கூடிய புல்வெளியாக மாற்றும்படி, கலீபா அவர்கள் உத்தரவிட்டார்கள்.

0 comments:

Post a Comment