Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-17

காலித் பின் வலீத்

பெர்ஸியாவைக் கைப்பற்றியதில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் பங்கு மகத்தானது. பொய்த்தூதர்கள் முறியடிக்கப்பட்டதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் பெர்ஸியாவைக் கைப்பற்றும் பொறுப்பை காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் கொடுத்ததோடு, காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 10 ஆயிரம் வீரர்களையும், அதன் பின் மதன்னா (ரலி)
அவர்களின் தலைமையில் 8 ஆயிரம் வீரர்களையும், ஆக மொத்தம் 18 ஆயிரம் வீரர்களோடு களம் இறங்கினார்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள். (இந்த வரலாற்றை விரிவாக அறிந்து கொள்ள இணையத்தில் உள்ள காலித் பின் வலீத் (ரலி) அவர்களது வாழ்க்கை வரலாற்றைப் பார்வையிடவும்).

சிரியா (ஹிஜ்ரி 13)

இந்த கால கட்டத்தில் சிரியாவானது ரோமர்களின் ஆட்சிப் பிரதேசத்தில் இருந்து வந்தது. ஈராக்கினைப் போலவே, ரோமப் பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுக் குலத்தவர்களுக்கும் ஹிஜாஸில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுக்களுக்கும் தொடர்புகள் பல இருந்து வந்தன. மதீனாவிற்கு முஸ்லிம்கள் ஹிஜ்ரத் செய்து வந்த பின்பு யூதர்களின் எதிர்ப்புக்கள், முஸ்லிம்களுக்கு எதிராக அதிகமாகிக் கொண்டே வந்தன. இந்த எதிர்ப்புகள் மதீனாவின் எல்லை மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் வாழ்ந்து வந்த குலத்தவர்களைப் பாதிக்க ஆரம்பித்தது, ஆங்காங்கே சிறு சிறு பிரச்னைகள் தலைதூக்க ஆரம்பித்திருந்தன.

ஹிஜ்ரி 8 ம் ஆண்டில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரோமர்களுக்கு எதிராக மிகப் பெரிய படையெடுப்பு ஒன்றை எடுத்தார்கள், அதற்கு முஅத்தா போர் என்று வரலாறு சிறப்பித்துக் கூறுகின்றது. இந்தப் போரில் மிகச் சிறிய முஸ்லிம்களின் படையானது, மிகப் பெரும் படையான ரோமர்களை எதிர்த்துக் களமிறங்கியது. ரோமர்களின் படையை ஹிராக்குளியஸ் மன்னனே நடத்தி வந்ததோடு, அவனது படையில் அரபுக்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போரில் ஜஃபர் தய்யார் (ரலி) மற்றும் ஸைத் பின் ஹாரிதா (ரலி) ஆகிய இருவரும் ஷஹீது என்ற வீரத்தியாகிகளானார்கள். ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தானே தலைமையேற்று 30 ஆயிரம் தனது தோழர்களுடன் தபூக் நோக்கி படை எடுத்துச் சென்றார்கள். ரோமர்களை எதிர்த்துக் களமிறங்கிய இந்தப் படையின் தொடர்ச்சியாகத் தான், அபுபக்கர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் உஸாமா (ரலி) அவர்களின் தலைமையேற்க ஒரு படையை, ரோமர்களை எதிர்த்துப் போரிடும் பொருட்டு அனுப்பி வைத்தார்கள் என்பதும், இந்தப் படைக்குத் தலைவராக உஸாமா (ரலி) அவர்களை நியமித்து விட்டதன் பின்னாள் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணமடைந்தார்கள் என்பதையும் நாம் அறிவோம்.

ரோம மற்றும் பாரசீகப் பேரரசுகள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் மீது எப்பொழுதும் போர் தொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கியே இருப்பதால், அபுபக்கர் (ரலி) அவர்கள் இப்பொழுது ரோமப் பேரரசின் நடவடிக்கைகள் குறித்து எப்பொழுதும், ஒரு உஷாராகவே இருந்தார்கள். ஈராக்கை வெற்றி கொண்டதன் பின்னாள், காலித் பின் ஸயீத் (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையை சிரியாவை நோக்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்தப் படையை தைமா என்ற இடத்தில் தங்குமாறும், தனது அடுத்த கட்டளை கிடைக்கும் வரை போரைத் துவக்க வேண்டாம் என்றும் அபுபக்கர் (ரலி) அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். மேலும், நாமாகச் சென்று போரைத் துவக்க வேண்டாம் என்றும், எதிரிகள் போரைத் திணிக்கும்பட்சத்தில் நம்முடைய பகுதிகளைத் தற்காத்துக் கொள்வதற்குண்டான முறையில் போர் செய்யுமாறும் கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தளபதிக்கு உத்தரவிட்டிருந்தார்கள். மேலும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை மறுத்து, பொய்த்தூதர்களுடன் கூட்டு வைத்திருப்பவர்களைத் தவிர்த்து, அப்பகுதியில் உள்ள ஏனைய குலத்தவர்களை கலந்தாலோசனை செய்து நம்முடைய படைகளுடன் சேர்த்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் பணித்தார்கள். முஸ்லிம்களின் இந்த நடவடிக்கைகளைக் கண்டு ரோமர்கள் எச்சரிக்கை அடைந்து, முஸ்லிம்களை எதிர்ப்பதற்குண்டான படைகளைத் தயாரித்ததோடு, அந்தப் படைகளை முஸ்லிம்கள் கூடாரமடித்திருக்கும் தைமா என்ற இடத்திலிருந்து, லாக்ம், கஸ்ஸான் மற்றம் ஜுதாம் என்ற மூன்று ஊர்களுக்கு அப்பால், முஸ்லிம்களுடன் போர் புரிவதற்குப் பதிலாக எச்சரிக்கையாகத் தனது படைகளை ஹிராக்கிளியஸ் நிறுத்திக் கொண்டான்.

ஹிராக்கிளியஸ் ன் இந்த நடவடிக்கைகள் பற்றி கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இதனை அறிந்த அபுபக்கர் (ரலி) அவர்கள், சற்றும் தாமதிக்கமால், அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு போரைத் துவக்குமாறு, காலித் பின் ஸயீத் (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

போரைத் துவக்குங்கள், எக்காரணம் கொண்டும் போரை நிறுத்த வேண்டாம், இறைவனிடம் உதவி கோரி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்றும் அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிவுரை கூறினார்கள்.

கலீபா அவர்களின் உத்தரவினை ஏற்றுக் கொண்ட காலித் பின் ஸயீத் (ரலி) அவர்கள் சற்றும் தாமதிக்காமல், தனது படைகளை நகர்த்தினார். எதிரிகள் இப்பொழுது களைந்து புறமுதுகிட்டு ஓட ஆரம்பித்தார்கள். இதில் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்னவென்றால், முஸ்லிம்களை எதிப்பதற்காக களமிறங்கிய அரபுக்குலத்தவர்கள் பலர் சத்திய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

களைந்து ஓடிக் கொண்டிருக்கும் எதிரிகளைத் துரத்தும் பொழுது, மிகவும் எச்சரிக்கையைக் கைக் கொள்ளுமாறு கலீபா அவர்கள் புதிய உத்தரவினை தனது தளபதிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த உத்தரவினைப் பெற்றுக் கொண்ட தளபதி அவர்கள், ஸிரா மற்றும் அபில் என்ற ஊர்களுக்கு நடுவே தனது படையை முகாமிட்டுக் கொண்டார்கள். இந்த இடத்தில் வைத்து, முஸ்லிம்களின் படைகளை முன்னேற விடாமல் தடுப்பதற்கு முயற்சித்த பஹான் என்ற ரோமத் தளபதியை வெற்றி கொண்டார்கள்.

ரோமர்களுக்கு எதிரான இந்தப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான், யமன், பஹ்ரைன் மற்றும் திஹாமா போன்ற பகுதிகளில் இருந்து பொய்த்தூதர்களை வெற்றி வாகை சூடி விட்டு, முஸ்லிம் படைகள் மதீனாவிற்குத் திரும்பி இருந்தன. காலித் (ரலி) அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க, இந்தப் படைகள் இப்பொழுது, ரோமர்களை எதிர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

நான்கு பிரிவுகளாக அனுப்பி வைக்கப்பட்ட முஸ்லிம்களின் படைப் பிரிவில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் இயங்கும் படைகளின் எண்ணிக்கையைத் தவிர்த்து 27,000 படை வீரர்கள் இருந்தார்கள். முஸ்லிம்களின் இந்த படை நகர்த்தலை அறிந்து கொண்ட ஹிராக்ளியஸ் மன்னன், தனது தம்பி தியோடிரிக் என்பவர் தலைமையில் 90 ஆயிரம் வீரர்கள் கொண்டதொரு படையை அமைத்து, அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களது தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், தியோடிரிக் - ன் மகன் ஜார்ஜ் ன் தலைமையில் இதே போன்றதொரு எண்ணிக்கையில் ஒரு படையை அமைத்து, யஸீத் பின் சுஃப்யான் (ரலி) அவர்களின் தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், தராக்கிஸ் என்பவன் தலைமையில் சுராஹ்பில் பின் ஹ{ஸ்னா (ரலி) அவர்களின் தலைமையில் வரும் படையை எதிர்க்கவும், மற்றும் கெய்கர் பின் நெஸ்டஸ் என்பவனது தலைமையில் 60 ஆயிரம் படைவீரர்கள் கொண்டதொரு படையை அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரலி) அவர்களது தலைமையின் கீழ் வரும் படையை எதிர்க்கவும், ஆக நான்கு படைப்பிரிவுகளும் ஒன்றுடன் ஒன்று சந்திக்கு முன்பாகவே, அவர்களைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்ற திட்டத்துடன் ஹெராக்ளியஸ் செயல்பட்டான்.

தியோடரின் தலைமையில் வந்த படை முஸ்லிம் படைகளுக்கு முன்பதாகவே வந்து பாலஸ்தீனத்தின் மேட்டுப் பகுதியாகிய திமஸ் ல் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகத் தயாராக இருந்தார்கள். ரோமர்களின் மிகப் பெரும் படையைப் பார்த்த முஸ்லிம்களின் மனதில் ஒரு வித கலக்கம் உண்டானது, இந்த நான்கு படைப்பிரிவுகளில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் அடங்கிய பிரிவுக்கு தலைமை வகித்து வந்த அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் மற்ற தளபதிகள், நிலைமையின் தீவீரம் குறித்தும், இனி செயல்பட வேண்டியதற்கான திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசனை நடத்தினார்கள்.

நாம் இனி தனித்தனி பிரிவுகளாக நின்று போர் புரிவோமென்றால், இவ்வளவு பெரிய எதிரிகளின் படையை எதிர்த்து வெல்வது என்பது கடினம், எனவே, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே படையாக எதிரிகளை நோக்கி களம் புகுவதே சிறந்ததென நினைக்கின்றேன், நாம் அனைவரும் எர்முக் என்ற இடத்தில் ஒன்று கூடுவோம் என்றும் அம்ர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் தனது கருத்தைத் தெரிவித்தார்கள்.

அபுபக்கர் (ரலி) அவர்களும் அமர் இப்னுல் ஆஸ் (ரலி) அவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு, ''அனைத்துப் படைப்பிரிவுகளும் எர்முக் ல் ஒன்று கூடி, எதிரிகளை நோக்கி களம் புகுந்து விடுங்கள். நிராகரிப்பாளர்களின் அந்த அணிகளைத் துவம்சம் செய்யுங்கள் என்று கட்டளையிட்டதோடு, மேலும் - நீங்கள் அல்லாஹ்வின் சத்திய வாக்கு மேலோங்க வேண்டும் என்பதற்காக களம் புகுந்திருக்கின்றீர்கள், அந்த சத்தியத்தை மேலோங்கச் செய்ய வேண்டிய பணியின் பொருட்டு அல்லாஹ் உங்களுக்கு வெற்றியைப் பரிசாகத் தர வல்லவனாக இருக்கின்றான், இன்னும் அவன் மீது யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களைத் தான் அவன் இழிவடையச் செய்வான்"" என்றும் தனது படைகளுக்கு கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

0 comments:

Post a Comment