Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-15

முஸைலமா என்ற பொய்யன்

பொய்த்தூதர்களை முறியடிப்பதற்காக புறப்பட்ட இஸ்லாமியப் படைகள் மிகவும் கடுமையானதொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. எந்தப் போரும் மிகவும் எளிதாக இருக்கவில்லை. அதிலும் பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்தவனும், நஜ்துப் பிரதேசத்தின் யமாமாப் பகுதியின் முஸைலமா வினை எதிர்த்து முஸ்லிம்கள் தொடுத்த போரானது மற்ற போர்களை விடவும் மிகக் கடுமையான போராக இருந்தது.
முஸ்லிம்கள் கடுமையான முறையில் அழைக்கழிக்கப்பட்டார்கள். அவன், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடைய தூதுத்துவத்தில் தனக்கும் பங்கு இருப்பதாக வாதிட்டான்.

யமாமாப் பகுதி மக்களுக்கு இஸ்லாத்தின் தூதை தெளிவாக எடுத்துரைக்க எடுக்கப்பட்ட முயற்சிகளையும் இந்த முஸைலமா தனது வாதத்திறமையினால் முறியடித்தான். மேலும், தொழுகைகக்காக அழைக்கப்படும் அதானிலும் இவன் மாற்றம் செய்தான். இன்னும் மதுபானத்தையும், விபச்சாரத்தையும் ஆகுமானவைகளாக அறிவித்தான். இதன் காரணமாக, கவரப்பட்ட மக்கள், இந்த வழிகேடனைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள், இன்னும் இவ்வாறு பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே சென்றது. அந்தப் பகுதியெங்கும் இவனைப் பிரபலப்படுத்தியது. இன்னும் இவன் பெண் தூதுவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்ட சஜாவை மணந்து கொண்ட பின், தன்னுடைய தூதுத்துவம் முன்னைக் காட்டிலும் வலுவடைந்திருப்பதாகவும் இவன் கூற ஆரம்பித்து விட்டான்.

எனவே, முதலில் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்புக்கு எந்தவித பலனும் இல்லாத காரணத்தால், இப்பொழுது போரைத் துவக்க வேண்டிய கட்டாயம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. எனவே, இவனை எதிர்த்துப் போர் புரிய முதலில் இக்ரிமா (ரலி) அவர்களையும், அவர்களை அடுத்து ஷ{ரஹ்பில் பின் ஹஸ்னா (ரலி) அவர்களது தலைமையிலும் படைகள் அனுப்பப்பட்டன. ஆனால், இந்த இரு படைகளையும் முஸைலமா தோற்கடித்தான்.

இப்பொழுது, கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள், காலித் பின் வலீத் (ரலி) அவர்களது தலைமையில் ஒரு படையைத் தயார் செய்து, முஸைலமாவை எதிர்த்துப் போர் புரிய அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், சற்று முன் தான் துலைஹா என்ற பொய்யனைத் தோற்கடித்து வந்திருந்தார்கள். இன்னும் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களது தலைமையில் அன்ஸார்களையும், ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களது தலைமையில் முஹாஜிர்களையும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களது படைகளுடன் சேர்ந்து கொள்ளும்படி கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் படை நடத்தி வருகின்றார்கள் என்பதனைக் கேள்விப்பட்ட முஸைலமா தனது படைகளை மேலும் அதிகரித்ததோடு, இப்பொழுது 40 ஆயிரம் படை வீரர்களுடன் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகத் தனது படையைத் தயாராக்கி, அந்தப் படைகளை அக்ரபா என்ற இடத்தில் நிலைகொள்ள வைத்தான்.

இப்பொழுது, இரண்டு படைகளும் நேருக்கு நேர் மோதுவதற்காகத் தயாராகி விட்டன. இப்பொழுது முஸைலமாவின் படைப்பிரிவில் இருந்த நஹார் என்பவன் முன் வந்து, தன்னை எதிர்க்கும் துணிவு முஸ்லிம்களில் எவருக்கும் உண்டா? என்று கர்ஜித்து நின்றான்.

அவனது சவாலை உமர் (ரலி) அவர்களின் தம்பியான ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஏற்றுக் கொண்டு அவனுடன் மோதினார்கள். ஒரே வாள் வீச்சில் அவனது தலையைத் தரையில் உருட்டி விட்டார்கள் ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள். இந்த நேருக்கு நேர் யுத்தம் முடிந்தவுடன், யுத்தம் ஆரம்பமாகியது.

ஆரம்பத்தில், முஸைலமாவின் படைகளை எதிர்க்க இயலாத முஸ்லிம்கள் பின்வாங்கினார்கள், இன்னும் சிறிது நேரங் கழித்து முஸ்லிம்கள் கலைந்து ஓடவும் ஆரம்பித்தார்கள். இதனைப் பயன்படுத்திக் கொண்ட முஸைலமா, காலித் பின் வலீத் (ரலி) அவர்களது கூடாரம் வரைக்கும் முஸ்லிம் படைகளை துரத்திக் கொண்டு வந்து விட்டான். ஏன்...?! காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூட பின்வாங்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளானார்கள்.

அப்பொழுது, கூடாரத்தில் காலித் பின் வலீத் (ரலி) இல்லை, அவர்களது மனைவி உம்மு தமீம் (ரலி) அவர்கள் மட்டும் தான் இருந்தார்கள். அங்கே காவலுக்கு முஜாஆ என்ற கைதி நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில், காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மனைவியான உம்மு தமீம் (ரலி) அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் முஸைலமாவின் ஆட்கள் கூடாரத்தில் நுழைந்தார்கள். இதனைக் கண்ட, கைதி முஜாஆ அவர்களைத் தடுத்தி நிறுத்தியதோடு,

அந்தப் பெண்மணியோ சுதந்திரமான பெண்..!

போயும் போயும் ஒரு பெண்ணையா நீங்கள் கொல்லப் போகின்றீர்கள்..!

அதோ.. பாருங்கள். அவர்களது ஆண்கள் நிற்கின்றார்கள்..! அவர்களை எதிர்த்துப் போரிடுங்கள்..! என்றதுடன், உம்மு தமீம் (ரலி) அவர்களை விட்டு விட்டு, முஸைலமாவின் ஆட்கள் அந்தக் கூடாரத்தை விட்டும் அகன்று விடுகின்றார்கள். அந்த இடத்தை விட்டும் அகலும் பொழுது, கூடாத்தைப் பிணைத்திருந்த கயிறுகளை வெட்டி, அறுத்தெறிந்து விட்டுச் செல்கின்றார்கள்.

(முஸாஆ அவர்கள் காலித் பின் வலீத் (ரலி) அவர்களால் சிறை பிடிக்கப்பட்ட கைதியாக இருப்பினும், அந்தக் கூடாரத்தை விட்டு விட்டு காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கிளம்பும் பொழுது, அதன் பாதுகாப்புப் பொறுப்பை முஜாஆ விடம் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் நடத்தை காரணமாகவும், முஜாஆ வைக் கௌரவமாக நடத்தியதன் காரணமாகவும் கவரப்பட்ட முஜாஆ அதற்குப் பிரதயீடாக, காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் மனைவியைக் காப்பாற்ற மிகவும் சாதுர்யமான முறையில் முஸைலமாவின் ஆட்களைச் சமாளித்து, அதன் மூலம் உம்மு தமீம் (ரலி) அவர்களைக் காப்பாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது).

அசைக்க முடியாத இஸ்லாத்தின் இறைநம்பிக்கையானது, சற்று நேரத்தில் தோற்று விட்டோம் நம்மால் முஸைலமாவை எதிர்த்து நிற்க முடியாது என்று சிதறி ஓடிய முஸ்லிம்களை, எவர் அசைந்தாலும், அசையாத உள்ளத்துக்குச் சொந்தக்காரரான தலைமைத் தளபதி, நிலைமையின் விபரீதத்தினைப் புரிந்து கொண்டு கன நேரத்தில், மீண்டும் சுதாரித்துக் கொண்டு, சிதறி ஓடிய முஸ்லிம்களை மீண்டும் ஒருங்கிணைத்து, அவர்களை களத்தில் நிற்க வைத்துப் போராட வைத்த நிகழ்வானது, இன்றும் வரலாற்றுப் பக்கங்களில் சாதனையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

ஒருவர் பின் ஒருவராக தாங்கள் வந்த நோக்கம் நிறைவேற ஒருவர் பின் ஒருவராக, தங்களை அற்பணித்துக் கொண்டிருந்தார்கள் முஸ்லிம் வீரர்கள்.

ஓடிக் கொண்டிருந்த தோழர்களைப் பார்த்து தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூவினார்கள்..!

என்னருமைத் தோழர்களே..!

இன்று நீங்கள் மிக மோசமானதொரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்களே..!

யா அல்லாஹ்..!

இந்த யமாமா மக்கள் வணங்குபவற்றை விட்டும், (ஓடிக் கொண்டிருக்கின்றார்களே) இந்த முஸ்லிம்களின் செயல்களை விட்டும் நான் ஒதுங்கிக் கொண்டேன்.

இதோ ..! இங்கே பாருங்கள்.. தோழர்களே..!

இவ்வாறு தான் தாக்க வேண்டும் என்று கூறிக் கொண்டே எதிரியை நோக்கி விரைந்தார்கள் தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள். எதிரிகளில் ஒருவனைத் தாபித் கைஸ் (ரலி) அவர்கள் தாக்கிய பொழுது, அவன் கொடுத்த எதிர்த் தாக்குதலின் காரணமாக, தாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தொடை துண்டிக்கப்பட்டது. மிகவும் துணிச்சலானதொரு முஸ்லிம் வீரர் ஒருவர், துண்டிக்கப்பட்ட தொடையை எடுத்து எதிரியின் பக்கம் வீசினார்கள், அந்தத் தொடை எவன் மீது பட்டதோ அவன் அக்கணமே உயிரை விட்டான். தாபித் பின் கைஸ் (ரலி) அவர்களும், உயிர்த்தியாக ஆகி விட்டார்கள்.

இருப்பினும், முஸ்லிம்கள் இன்னும் தங்களது கூடாத்தை விட்டும் வெகு தூரம் விரட்டப்பட்ட நிலையில் இருந்தார்கள். இந்த நிலையில் முஸ்லிம்களைப் பார்த்து, ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறினார்கள்..!

(ஓடிக் கொண்டிருந்த முஸ்லிம்களைத் தடுத்த நிறுத்திய) அவர் கூறினார், இந்தக் கூடாரம் காலியானதன் பின் நீங்கள் எங்கு தான் போக முடியும்?

இறைவன் மீது சத்தியமாக..!

எதிரியைத் துரத்தி அடித்து வெற்றி வாகை சூடும் வரையிலும், அல்லது இறைவனிடம் என்னை ஒப்படைக்கும் வரையிலும், இதற்கு மேல் நான் ஒரு வார்த்தை பேச மாட்டேன். அதன் காரணமாக நான் அவனிடம் மன்னிப்பைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இதனைக் கூறிக் கொண்டே எதிரியை நோக்கிப் பாய்ந்த ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்கள், அவர்களது கையில் வாளை ஏந்திக் கொண்டிருந்த நிலையிலேயே இறையடி சேர்ந்தார்கள்.

அவருக்குப் பின் அபூ ஹ{தைபா (ரலி) அவர்கள், இவ்வாறு கூறிக் கொண்டே எதிரியின் மீது பாய்ந்தர்கள்.

ஓ..! என்னருமைக் குர்ஆனிய மக்களே..!

உங்களது செயல்களின் மூலம் குர்ஆனை அழகுபடுத்துங்கள்..!

இப்பொழுது அபூ ஹ{தைபா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டார்கள்.

ஸைத் பின் கத்தாப் (ரலி) அவர்களும் கொல்லப்பட்ட பின், பராஆ பின் மாலிக் (ரலி) (இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் உதவியாளரான அனஸ் (ரலி) அவர்களின் சகோதரரவார்) அவர்கள் முன் வந்தார்கள். இவரிடம் ஒருவிதமான பழக்கம் இருந்தது. அதாவது, போருக்குக் கிளம்பு முன் அதன் உத்வேகத்தால், இவரது உடல் குலுங்க ஆரம்பித்து விடும், எந்தளவுக்கெனில் பிறர் இவரைப் பிடித்து நிறுத்தும் அளவுக்கு உடல் குலுங்க ஆரம்பித்து விடும். இப்பொழுது, முஸ்லிம்கள் தோல்வியைச் சந்திக்கக் கூடிய நிலையில் இருந்து கொண்டிருப்பதை நினைத்தும், அடுத்து நாம் களத்தில் மிகவும் உத்வேகத்துடன் இறங்க வேண்டிய சூழ்நிலை வந்திருப்பதையிட்டும், அவரது உடல் குலுங்க ஆரம்பித்தது. அந்த நிலையிலேயே, தனது தோழர்களைப் பார்த்துக் கூவி அழைக்க ஆரம்பித்தார்.

என்னருமை முஸ்லிம்களே..!

நீங்கள் எங்கு செல்கின்றீர்கள்?

இங்கே பாருங்கள்..!

உங்களது சகோதரன் பராஆ பின் மாலிக்..! நின்று கொண்டிருக்கின்றேன்.

என்னிடம் விரைந்து வாருங்கள்..!

பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் கூவியழைத்ததன் தாக்கம், உணர்வு கொண்ட சில முஸ்லிம் வீரர்கள் பராஆ வை நோக்கி, தங்களது அற்பணம் செய்யும் நோக்கில் திரண்டு வந்தார்கள். வந்த வேகத்திலேயே எதிரியுடன் களம் புகுந்து போராட ஆரம்பித்தார்கள்.

இந்தப் புதுவித தாக்குதலை எதிர்பாராத எதிரிகளால், இந்தக் குழுவினரைத் தாக்குப் பிடிக்க இயலாமல் பின்வாங்க ஆரம்பித்த எதிரிகள், முஸைலமாவின் தீவிர ஆதரவாளனான முஹக்கம் பின் அல் துஃபைல் என்பவன் கூடாரமடித்திருந்த இடம் வரை வந்து விட்டார்கள். பின்வாங்கி ஓடிய எதிரிகள் தங்களது ஆட்களைப் பார்த்ததும் முஸ்லிம்களைத் தாக்குவதற்காகத் தங்களது தோழர்களைக் கூவி அழைக்க ஆரம்பித்தார்கள். இந்த நிலையில் அப்துர் ரஹ்மான் பின் அபுபக்கர் (ரலி) அவர்கள் எய்ததொரு அம்பு அல் துஃபைல் ன் கழுத்தில் சொறுகியது. அந்த நிலையிலேயே அவன் இறந்து தரையில் சரிந்தான்.

முஸ்லிம்களின் இந்த முன்னேற்றம் புதுவிதத் தெம்பை முஸ்லிம்களுக்கு அளித்தது. இதன் காரணமாக அவர்கள் எதிரிகளை ஹதீகா என்ற இடம் வரை பின்வாங்கச் செய்தார்கள். இந்த இடத்தில் முஸைலமா பாதுகாப்பானதொரு கோட்டையில் நுழைந்து கொண்டு, தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஆரம்பித்தான். அவனைத் தொடர்ந்து அவனது ஆட்களும் அந்த கோட்டைக்குள் நுழைந்து கொண்டு, கோட்டைக் கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள்.

இப்பொழுது, பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் தனது தோழர்களை அழைத்து, தோழர்களே..! இந்த தாழிடப்பட்ட கோட்டை மதில்களையும் தாண்டி, கோட்டைக்குள் என்னைத் தூக்கி எறியுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அங்கிருந்த தோழர்கள் இந்த ஆபத்தான செயலில் இறங்க மனமில்லாமல் நின்று கொண்டிருந்தார்கள். ஆனால், பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள் தனது தோழர்களை வற்புறுத்தி, தன்னை கோட்டைக்குள் தூக்கி எறியுமாறு வேண்டிக் கொண்டார்.

பின், கோட்டைச் சுவரின் மீதேறி கோட்டைக்குள் குதித்த பராஆ பின் மாலிக் (ரலி) அவர்கள், நேரே வாயிற் கதவருகே சென்று வாயிற் கதவை முஸ்லிம்கள் நுழைவதற்காகத் திறந்து விட்டார். கோட்டைக் கதவு திறந்தவுடன், உள்ளே நுழைந்த முஸ்லிம் வீரர்கள் எதிரிகளைத்தாக்க ஆரம்பித்தார்கள். ஆனால், எதிரிகளும் சளைக்காமல் போரிட்டார்கள், முஸைலமா தனது இடத்தை விட்டும் அகலவில்லை, விட்டுக் கொடுக்காது போரிட ஆரம்பித்தான்.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் தனது யுத்த தந்திரத்தை மாற்றி அமைக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு கோத்திரத்தாரையும் அழைத்து, அவரவர் அந்த கோத்திரத்துத் தலைவருக்குக் கீழ் போரிடுமாறு, தனது தோழர்களைக் கேட்டுக் கொண்டார். இதன் மூலம் யார் பலவீனமாக இருக்கின்றார்கள் என்பது தெரிந்து விடும்.

இப்பொழுது, ஒவ்வொரு கோத்திரத்தாரும் தங்களது திறமையையும், தங்களது முழுப்பலத்தையும் பிரயோகித்துத் தங்களது அணிக்கு கௌரவம் சேர்க்க வேண்டும், பலவீனமான நிலையில் நாம் இருந்து விடக் கூடாது, நமக்கு ஒப்பாக யாரும் இல்லை' என்று சொல்லும் அளவுக்கு போரிட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கவே, முன்னைக்காட்டிலும் அனைவரும் மிகவும் உத்வேகத்துடன் போரிட ஆரம்பித்தார்கள்.

முஹாஜிர்கள் பக்கமும், அன்ஸாரிகள் பக்கமும் மிகவும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், இன்னும் முஸைலமா தனது பிடியை சற்றும் தளர்த்தாமல் போரிட்டுக் கொண்டிருந்தான். முஸைலமா கொல்லப்படாதது வரைக்கும் இந்தப் போர் நிற்காது என்பதை காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் உணர ஆரம்பித்தார்கள். இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் முன்வந்து, தனி நபர் யுத்தத்திற்குத் தயாரா? என்னை எதிர்க்கும் சக்தி உங்களில் எவருக்கேனும் உண்டா? என்று கூவி அழைக்க ஆரம்பித்தார். அவரது அறைகூவலை ஏற்று முன்வந்த பலர் அவரது வாளுக்கு இரையாகி உயிரை மாய்த்துக் கொண்டனர். இவ்வாறாக,முன்னேறிக் கொண்டிருந்த காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், இறுதியாக முஸைலமா இருக்கின்ற இடத்தினருகே வந்து விட்டார். அவனிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, அவன் எதிர்பாராத வகையில் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்திய காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், அந்த அதிரடித் தாக்குதலின் காரணமாக நிலைகுலைந்தான் முஸைலமா.

பின் தனது தோழர்களைப் பார்த்து, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறினார்கள். தோழர்களே..! நீங்கள் தைரியத்தை இழக்க வேண்டாம். உறுதியாக நின்று நீங்கள் தாக்கினீர்கள் என்றால், அதனைச் சமாளிக்கும் சக்தி அவர்களுக்குக் கிடையாது, எதிரியைச் சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று ஆர்வமூட்டினார்.

ஒரு தாக்குதலையே சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விட்டான். ஒரு தாக்குதலையே, தலைவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லையே என்று கூறிக் கொண்டு, முஸைலமாவின் ஆட்கள் இப்பொழுது கலைந்து ஓட ஆரம்பித்தார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் முஸைலமாவின் ஆதரவாளர்கள் கேட்டார்கள்,

முஸைலமாவே..

உனக்கு அருளப்பட்டிருப்பதாக வாதிட்டாயே, அந்த வேத வாக்குறுதிகள் என்னவாயிற்று இப்பொழுது?

முஸைலமா பதில் கூறினான் :

'எதனைப் பாதுகாப்பதற்காக நீங்கள் அணி திரண்டிருக்கின்றீர்களோ, அந்த உங்களது கண்ணியத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'.

இந்த வார்த்தைகளை அவன் முழுவதுமாகச் சொல்லி முடித்திருக்கவில்லை,

ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற அதே வஹ்ஸி (ரலி) அவர்கள், தான் இஸ்லாத்திற்கு முன்னிருந்த பொழுது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதனை ஈடு செய்யும் பொருட்டு, தன் கையிலிருந்த வேல் கம்பை முஸைலமாவை நோக்கி வீசினார். அதனை சமாளிக்க இயலாத முஸைலமா கீழே வீழ்ந்த பொழுது, அன்ஸாரிகளில் உள்ள இளைஞரொருவர், அவனது கழுத்தை வெட்டி சாய்த்தார்.

அபீசீனியா அடிமையான வஹ்ஸி (ரலி) அவர்களின் கரங்களால், முஸைலமா கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி காட்டுத் தீ போல போர்க்களத்தில் பரவ ஆரம்பித்தது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்ட முஸைலமாவின் ஆட்கள் நாலா பக்கமும் சிதறி ஓட ஆரம்பித்தார்கள். இத்துடன், முஸ்லிம் படை முஸைலமாவிற்கு எதிரான போரில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது.

இந்தப் போரில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான எதிரிகள் கொல்லப்பட்டார்கள் என்று தபரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதன் காரணமாக, இந்தப் பகுதியை 'மரணப் பூங்கா' என்றழைக்கப்படுவதுண்டு.

இப்பொழுது, காலித் பின் வலீத் (ரலி) அவர்கள், முஸைலமாவின் உடலை முஜாஆ அவர்களின் துணையுடன் அடையாளம் கண்டு கொண்டார்கள். இந்தப் போரில் முஹாஜிர்களும், அன்ஸாரிகளுமாக 300 பேர்களும், இன்னும் அவர்களல்லாத மற்ற பகுதிகளில் இருந்து வந்து கலந்து கொண்ட முஸ்லிம்கள் 300 பேர்களும், உயிர்த்தியாகிகளானார்கள்.

வெற்றியை கலீபா அவர்களுக்கு அறிவிக்கு முகமாக, பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரையே தனது பிரதிநிதியாக காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

தன்னிடம் வந்த பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்த அந்தப் பிரதிநிதியிடம், பாவச்சுமைகளுடன் உங்களது கோத்திரத்தாரின் உயிர்கள் பிடுங்கப்பட்டது குறித்து நான் வருத்தமடைகின்றேன், அவர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் கீழ்த்தரமானது என்று அபுபக்கர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நீங்கள் கேள்விப்பட்டதும், சொல்வதும் அனைத்தும் உண்மையே என்று அந்தப் பிரதிநிதியானவர், அபுபக்கர் (ரலி) அவர்களிடம் கூறினார்.

முஸைலமாவினுடைய போதனைகள் தான் என்ன? சற்று கூறுங்கள் பார்ப்போம் என்றார்கள்.

இதே அதனுடைய நகல் என்னிடமிருக்கின்றது என்று கூறிய அவர் கலீஃபா அபுபக்கர் (ரலி) அவர்களது முன்னிலையில் அதனை வாசித்துக் காண்பிக்க ஆரம்பித்தார் :

“ஓ.. தவளையே..! இது வேதமாகும். குடிப்பவரைத் தடுக்காதீர்கள், தண்ணீரை அசுத்தமாக்காதீர்கள். இந்த உலகத்தின் பாதி நமக்குரியது, மற்ற பாதி குறைஷிகளுக்குரியது. ஆனால் குறைஷிகள் மிகவும் கொடூரமானவர்கள்''.

இதனைக் கேட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள் இறைவனைப் புகழ்ந்தவர்களாக, உங்கள் இரக்கப்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறிய அபுபக்கர் (ரலி) அவர்கள், இது தான் உங்களது வேத வசனங்களா? இதில் எந்த தெய்வீகத் தன்மையும் இல்லையே..! இவ்வாறிருக்கும் பொழுது, எது தான் சத்தியத்திலிருந்து உங்களைப் பாதை மாற்றிச் சென்றது? தபரி, 3ம் பாகம், பக்.254.

சுருங்கச் சொன்னால், பொய்த்தூதர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் அங்கும் இங்குமாக சில நிகழ்வுகளில் முஸ்லிம்கள் தைரியம் இழந்து பின்வாங்கினாலும், அத்தகைய சந்தர்ப்பங்களை அடுத்து மீண்டும் அவர்கள் சுதாரித்துக் கொண்டு போரிட்டார்கள், பொய்த்தூதர்களை வேரறுத்தார்கள். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டில், பொய்த்தூதர்கள் வேரறுக்கப்பட்ட செய்தி அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது, குறுகிய 9 மாத கால அவகாசத்தில், மதீனா விலிருந்து பஹ்ரைன் வரைக்கும் மற்றும் அம்மான் ஆகிய பகுதிகளும் இப்பொழுது முஸ்லிம்களின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

0 comments:

Post a Comment