Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-08

பேரருளானை நோக்கி...

நோய் சில வேளைகளில் அதிகரிப்பதும் சில வேளைகளில் குறைவதுமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் இறுதிநாளான திங்கட்கிழமையன்று காலையில் அவர்கள் நோய் சற்று தளர்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி மூர்ச்சையானார்கள்.


இந்த நிலையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருநாவிலிருந்து, 'அல்லாஹ் எவர்கள் மீது தன் அருளைப் பொழிந்தானோ அவர்களுடன்" என்னும் சொற்களை அடிக்கடி வெளிப்பட்ட வண்ணமிருந்தன. சிலவேளை, 'இறைவா! நீயே உயர்ந்த நண்பன்!" என்று கூறியவண்ணமிருந்தார்கள். சில வேளைகளில் 'இப்போது வேறு எவருமில்லை. அந்த உயர்ந்த நண்பனே தேவை!" என்று கூறிய வண்ணமிருந்தார்கள், இவ்வாறெல்லாம் பிரார்த்தித்த வண்ணம் இருந்தார்கள. பின்னர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புனித ஆத்மா பிரிந்தது.

அல்லாஹம்ம ஸல்லி அலா முஹம்மதின் வபாரிக்க வஸல்லம்

அல்லாஹ்வே, முஹம்மத் மீது அருள் வளம் பொழிவாயாக! அவருக்கு சாந்தி வழங்குவாயாக!

ஹிஜ்ரி 11-ல் ரபிய்யுல் அவ்வல் மாதத்தில் பொருமானார் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். மரணித்த நாள் திங்கட் கிழமை ஆகும்.

அடுத்த நாள் அவர்களின் உடல் குளிப்பாட்டி கபனிடப்பட்டது. மாலை நேரத்திற்குள் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் திருவுடல் அவர்கள் மரணித்த அதே அறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

'நீரும் மரணிப்பவரே! அவர்களும் மரணிக்கக் கூடியவர்களே!" (39 : 30)

(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்" என்று கூறுவார்கள்.( 2:156).

குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட அபுபக்கர் (ரலி) அவர்கள், தனது குதிரையில் ஏறி இறைத்தூதர் (ஸல்) அவர்களது இல்லத்திற்கு விரைந்தார்கள். அப்பொழுது, உமர் (ரலி) அவர்கள் பள்ளியில் நின்று மக்கள் முன் உரையாற்றிக் கொண்டிருந்த நிகழ்ச்சிகள் எதனையும் கண்டு கொள்ளாத அபுபக்கர் (ரலி) அவர்கள், நேராக இறைத்தூதர் (ஸல்) அவர்களது உடல் வைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றார்கள். அவர்களை மூடியிருந்த போர்வையை நீக்கி விட்டு, அந்த மலர் வதனத்தில் முத்தமிட்ட அபுபக்கர்(ரலி) அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்..! உங்களது வாழ்வும் புனிதமாக இருந்தது..! இன்னும் உங்களது மரணமும் புனிதமானதே..! என்றார்கள்.

இறைவன் தனது அடியாரின் மீது தேர்ந்தெடுத்துக் கொண்ட அந்த மரணத்தை நீங்கள் சுவைத்துக் கொண்டு விட்டீர்கள். இனி எப்பொழுதும் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள்..!

இந்த புகழாரங்களைச் சூட்டி விட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மலர் வதனத்தைப் போர்வையால் மூடி வைத்து விட்டு, வெளியே வந்தார்கள். அங்கே உமர் (ரலி) அவர்கள் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம் இவ்வாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்கள் :

இங்கே இருக்கும் நயவஞ்சகர்கள் சிலர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை. மூஸா (அலை) அவர்கள் இறைவனிடம் சென்றிருப்பது போல் சென்றுள்ளார்கள். ஆனால் அவர்கள் தனது இறைவனிடம் சென்றிருப்பதை வைத்து, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்து விட்டதாகக் கூறுகின்றார்கள். மூஸா (அலை) அவர்கள் எவ்வாறு நாற்பது நாட்கள் கழித்துத் திரும்பி வந்தார்களோ, அவ்வாறே இறைத்தூதர் (ஸல்) அவர்களும் திரும்பி வருவார்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

இதனைச் செவிமடுத்த அபுபக்கர் (ரலி) அவர்கள், உமரே..! நிறுத்துங்கள்..! அமைதியாக இருங்கள்..! உங்களை நீங்கள் முதலில் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

பின்பு இறைவனைப் புகழ்ந்தவர்களாக..!

கேட்டுக் கொள்ளுங்கள்..! தோழர்களே..! நிச்சயமாக..! யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ, அறிந்து கொள்ளுங்கள்..! முஹம்மதும் இறந்து போகக் கூடியவரே..! யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார்களோ...! அறிந்து கொள்ளுங்கள்..! அவனே நித்திய ஜீவன், அவனுக்கு இறப்பென்பதே கிடையாது..! என்று கூறி விட்டு, கீழ்க்கண்ட இறைவசனத்தை ஓத ஆரம்பித்தார்கள்..

முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (3:143)

மேற்கண்ட இறைவசனத்தை ஓதிக்காட்டிய பின்பு, தோழர்கள் தங்களது நிலையை உணர்ந்தவர்களாகக் கூறினார்கள், இப்பொழுது தான் இந்த வசனம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளியது போன்றிருக்கின்றது என்பதை நாங்கள் அப்பொழுது உணர்ந்து கொண்டோம் என்று கூறினார்கள்.

அப்பொழுது உமர் (ரலி) அவர்களின் நிலை எவ்வாறிருந்தது என்று அபூஹ{ரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

அபுபக்கர் (ரலி) அவர்களிடமிருந்து இந்த வசனத்தைக் கேட்ட உமர் (ரலி) அவர்களது பாதங்கள் நிலைகுலைய ஆரம்பித்தன, அவரால் சரியாக நிற்கக் கூட முடியாத அளவுக்கு தள்ளாடிய உமர் (ரலி) அவர்கள், நிலைகுலையாத அந்த மனிதர் நிலத்தில் சாய்ந்தே விட்டார், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அபுபக்கர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனம் உமர் (ரலி) அவர்களைத் தெளிவு பெறச் செய்தது.

மேற்கண்ட சம்பவத்தைப் பற்றி தனது ஆட்சியின் பொழுது ஒருநாள் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் நினைவு கூர்ந்த உமர் (ரலி) அவர்கள், மேற்கண்ட 2:143 (நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம்; (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸ_ல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;)வசனத்தின் மூலம், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருக்கக் கூடியவர்களே..! என்று தான் நான் எண்ணிக் கொண்டிருந்தேன் என்று கூறினார்கள்.

0 comments:

Post a Comment