Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-06

கைபர் யுத்தம், முஹர்ரம் 7

ஹதைபிய்யாஉடன்படிக்கைக்குப் பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு மாத கால அளவு தான் தங்கியிருந்திப்பார்கள். பின்பு அவர்கள் கைபரை நோக்கிப் படை எடுத்தார்கள். இந்த கைபர் பகுதியில் அதிமான யூதக் குலங்களும், அவர்களைச் சார்ந்தவர்களின் கோட்டைகளும் அதிகமாக
இருந்தன. இந்தப் போரில் அலி (ரலி) அவர்கள் வெள்ளைக் கொடி ஏந்திக் கொண்டு சென்றார்கள். எந்தக் கோட்டையைத் தகர்க்க முடியாது என இறுமாப்புடன் இருந்தார்களோ, அதனைத் தகர்க்கும்படைக்கு தலைமை தாங்கி அபுபக்கர் (ரலி) அவர்கள் சென்றார்கள். ஆனால் அவர்களும் தோல்வியையே தழுவினார்கள். பின்பு உமர் (ரலி) அவர்களின் தலைமையில் படை சென்ற போதும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை, மூன்றாவதாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களின் தலைமையில் படையை அனுப்பி வைத்தார்கள்.

அப்பொழுது, நான் இப்பொழுது அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அதிகமதிகம் நேசிக்கக் கூடியவரையும், இன்னும் போர்க்களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடாத ஒருவரையும் இந்தப் படைக்குத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அந்த முன்னறிவிப்பு, நிறைவேறியது, அந்த கைபர் கோட்டை கைப்பற்றப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்புக்குச் சொந்தக் காரர், அலி (ரலி) அவர்கள் தான்.மக்கா வெற்றி, ரமழான் 8

ஹ{தைபிய்யா உடன்படிக்கையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட விதிமுறைகளை வெகு நீண்ட காலம் குறைஷியர்களால் பேணிக் காக்க இயலவில்லை. வெகு சீக்கிரமே அவர்கள் விதிமுறைகளை மீற ஆரம்பித்தார்கள். பனூ குஸாஆ என்ற கோத்திரத்தார்கள் முஸ்லிம்களுடன் நட்பு ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்த அடிப்படையில், அவர்கள் மீது போர் தொடுப்பதும், அவர்கள் மீது போர் தொடுப்பவர்களுக்கு ஒத்துழைப்பதும் ஹ{தைபிய்யா உடன்படிக்கைப்படி, உடன்படிக்கையை முறிக்கும் செயலாகும். ஆனால் பனூ குஸாஆ மீது பனூ பக்கர் என்ற கோத்திரத்தவர்கள் தாக்குதல் நடத்திய போது அவர்களுக்கு குறைஷிகள் உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள்.

பனூ குஸாஆ குறைஷிகள் மற்றும் பனூ பக்கர் கோத்திரத்தவர்களின் தாக்குதலுக்குப் பயந்து கஃபாவில் அடைக்கலம் புகுந்தும் பிரயோசனமின்றிப் போனது. எனவே, இப்னு சலீம் என்பவரை மதீனாவிற்குத் தூது அனுப்பி, முஸ்லிம்களின் உதவியைக் கோரிப் பெறுவது என்று முடிவெடுத்தார்கள். இந்த அடிப்படையில், இப்னு சலீம் மதீனா சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்ததோடு மட்டுமல்லாது, தங்களது நிலையைக் குறித்து ஒரு உருக்கமான பாடல் ஒன்றையும் பாடினார். அந்தப் பாடலின் வரிகளில் இழையோடிய சோகத்தையும், அவர்களது தேவையையும் உணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ரமழான் மாதம் 8 ம் நாளன்று மக்காவை நோக்கிப் படையெடுக்க முடிவு செய்தார்கள்.

ரமழான் 10 ம் நாளன்று 10 ஆயிரம் தோழர்கள் புடைசூழ மக்காவிற்குள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பிரவேசித்தார்கள். இப்பொழுது, முஸ்லிம்களை எதிர்ப்பது என்பது வீண் வேலை என்றுணர்ந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தையார் அப்பாஸ் அவர்கள், சமாதானம் செய்து கொள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களை அணுகினார்கள். அப்பாஸ் அவர்களின் சமாதானத் தூதை ஏற்றுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், மக்காவில் உள்ள அனைத்து முஸ்லிமல்லாதவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கினார்கள். ஆனால் சில நபர்களைக் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவர்களுக்கு பொதுமன்னிப்பு கிடையாது என்றும், இன்னும் அவர்கள் கஃபாவின் திரைச்சீலையினால் சுற்றப்பட்டிருந்தாலும் அவர்களைக் கொன்று விடும்படிக் கூறினார்கள். ஏனெனில், கடந்த காலத்தில் அவர்கள் செய்த கொடுஞ் செயல்கள் மன்னிப்பின் எல்லையையும் கடந்த அநாகரீகச் செயலாக இருந்தது தான் அதன் காரணமாகும்.

கடந்த 13 ஆண்டுகளில் சொல்லொண்ணா துயரங்களை முஸ்லிம்களின் மீது கட்டவிழ்த்து விட்ட அவர்களுக்குத் தான் இன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. எந்த நகரில் இருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரட்டப்பட்டார்களோ, அதே நகரில் இன்று ஆட்சியாளராக 10 ஆயிரம் தோழர்கள் புடை சூழ எதிர்ப்பின்றி பிரவேசிக்கும் வல்லமையை இறைவன் முஸ்லிம்களுக்கு வழங்கியிருந்தான்.

இப்பொழுது அபுபக்கர் (ரலி) அவர்கள் தனது தந்தையார் அபூ குஹஃபா அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன் நிறுத்தி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே..! எனது தந்தைக்கு இஸ்லாத்தினைப் பற்றி சற்று எடுத்துக் கூறுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

அபுபக்கரே..! இந்தப் பெரிய மனிதரை சங்கடத்திற்குள்ளாக்கி விட்டீர்களே..! என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி விட்டு, அவரைத் தேடி நான் தான் போயிருக்க வேண்டும் என்றார்கள்.

இல்லை..! இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! அவர் தங்களைத் தேடி வந்திருப்பது தான் சிறந்தது என்றார், அபுபக்கர் (ரலி) அவர்கள்.

தனக்கு முன்பு நெருக்கமாக அபூ குஹாஃபா அவர்களை அழைத்து அமர வைத்துக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், அவரது நெஞ்சின் மீது தனது கையை வைத்து, அபூ குஹஃபா அவர்களே, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி, கலிமாவைக் கற்றுக் கொடுத்தார்கள்.

இப்பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இனிய நண்பரான அபுபக்கர் (ரலி) அவர்களின் தந்தையாரும், மக்காவின் வெற்றிக்குப் பின் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

தபூக் யுத்தம், ரஜப் 9

0 comments:

Post a Comment